தர்மபுரி:
கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ்பாஷா. இவரது தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த 11ம் தேதி தனது உறவினர்களுடன் நவாஸ்பாஷா சென்றிருந்தார்.
மறுநாள் 12ம் தேதி நவாஸ்பாஷா உள்ளிட்டோர் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தனர். மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் வந்தபோது, கலவர கும்பல் ஒன்று காரை வழி மறித்தது. பிறகு, கார் மீது பெட்ரோல் ஊற்றி, உள்ளே இருந்தவர்களுடன் சேர்த்து எரிக்க முயன்றது.
இதையடுத்து பயந்து அலறியபடி, காரை விட்டு வெளியேறிய நவாஸ்பாஷா மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், காட்டுக்குள் ஓடி உயிர் பிழைத்தனர். பிறகு பல்வேறு சோதனைகளுக்கிடையே ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.
இந்நிலையில் தர்மபுரி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் நவாஸ்பாஷா புகார் மனு அளித்தார். அதில் தாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு வழங்க கோரியிருந்தார்.