டில்லி:
பிற மாநில மொழிகளிலும் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. ஆனால், தொன்மையான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதி மன்றத்தில் தற்போதுள்ள நடைமுறையின் கீழ், தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் உச்சநீதி மன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. பிராந்திய மொழிகளிலும் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்று பல ஆண்டுகாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் மாநில மொழிகளில் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இனி, மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆங்கிலம் அல்லாதவர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையாக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிராந்திய மொழிகளில் கிடைக்க இந்த மாத இறுதிக்குள் ஏற்பாடு செய்வதாக தெரிவித்து உள்ளது.
அதன்படி, ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாமிஸ், ஒடியா ஆகிய ஐந்து மொழி களிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான மென்பொருளை உச்சநீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் பிரிவு உருவாக்கியுள்ளது. தலைமை நீதிபதியும் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
தீர்ப்புகளை மொழிபெயர்க்க வேண்டிய மொழிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து மேல் நீதிமன்றத்திற்கு வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக இணையதளத்தில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், மாத இறுதிக்குள் வடமொழி தீர்ப்புகள் இணையதளத்தில் வெளியிடப்படும்,ஆனால், மொழிபெயர்க்கப் பட்ட பதிப்புகள் தீர்ப்பு வெளியாகி ஒரு வாரம் கழித்தே பதிவேற்றப்படும். என்றும் உச்சநீதி மன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவில் தகராறுகள், குற்றவியல் விஷயங்கள், நில உரிமையாளர்-குத்தகைதாரர் தகராறுகள், திருமண பிரச்சினைகள் போன்ற தனிப்பட்ட வழக்குகள் தொடர்பான உத்தரவுகளுக்கு மொழிபெயர்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
இந்த மொழி பட்டியலில் இந்தியாவின் தொன்மையான மொழியான தமிழ் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல, கன்னடமும், தெலுங்கும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.