சென்னை: தாம்பரத்திலுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு கூடுதல் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனை, TNHSRP சார்பில் ரூ.8.23 கோடியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாம்பரம் சானடோரியத்தில், 1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை (GHTM), நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக காசநோய் (TB) மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. 776 படுக்கைகளுடன் கூடுதலாக 120 படுக்கைகள் உள்ள மறுவாழ்வு மையத்தில், 31 வார்டுகளிலுள்ள 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு தொற்று மற்றும் தொற்று அல்லாத நுரையீரல் நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் இம்மருத்துவமனை முக்கிய பங்கு வகிக்கிறது.
தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை : TNHSRP சார்பில் ரூ.8.23 கோடியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்!
இங்கு காசநோய், எச்.ஐ.வி / எய்ட்ஸ், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்துமா, ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுக்குழாய் தளர்ச்சி, நுரையீரல் அழற்சி, திசு இடைநார் நுரையீரல் நோய்கள் (Interstitial lung Diseases), நுரையீரல் புற்றுநோய் (Lung Malignancies) மற்றும் பல்வேறு வகையான சுவாசக் கோளாறுகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் காசநோய் சிகிச்சைக்கான சிறந்த மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை (GHTM) இத்தகைய தீவிர சிசிக்கைகளுக்கு பயனளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அண்மைக் காலங்களில், இந்த மருத்துவமனை நாள்பட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் விரிவான சிகிச்சை அளிப்பதற்கு, அதிநவீன மறுவாழ்வு மையம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்த மறுவாழ்வு மையம் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, ஆண்டுக்கு சுமார் 1,60,000 வெளிநோயாளிகள், 15,000 உள்நோயாளிகள் மற்றும் 4,000 எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதுடன், மாநிலத்தின் அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகளை தொடர்ந்து நிறைவு செய்து வருகிறது. உலக வங்கியின் நிதியுதவியுடன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் (TNHSRP) கீழ், 8.23 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மேம்பாட்டு பணிகளில், நுழைவு வளைவு, சுற்றுச்சுவர், மருத்துவமனை வளாகத்தின் உட்புற அணுகு சாலைகள், மழைநீர் வடிகால், அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி (Sump), தீயணைப்பு ஏற்பாடு முறைகள், மருத்துவ எரிவாயு இணைப்பு, மின்மாற்றி ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும். இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளானது தமிழ்நாட்டு மக்களுக்கு எளிதான மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதி வழங்கிட வேண்டும் என்ற அரசின் உயரிய நோக்கத்தை பிரதிபலிக்கிறது.