அமராவதி
இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சினை தீரும் வரை இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவிப்பதும பதிலுக்கு இந்திய ராணுவம் குவிக்கப்பட்டதும் பேச்சு வார்த்தைகள் நடப்பதும் வழக்கமாகி உள்ளது. சென்ற வருடம் லடாக் எல்லையில் சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடும் விரோத மனப்பான்மை இருந்து வருகிறது.
இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆந்திர மாநிலம் அமராவதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளில், இந்தியா மற்றும் சீன அதிகாரிகள், ஈடுபட்டு வருகின்றனர். சீன ராணுவ வீரர்களை, எல்லையில் இருந்து திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஒன்பது கட்ட பேச்சுகள் இதுவரை நடந்துள்ளன. இது ராணுவ வீரர்கள் தொடர்பானது என்பதால், இது மிகவும் சிக்கலான பிரச்னை ஆகும் .
எந்தெந்த பகுதியில், வீரர்கள் உள்ளனர், எல்லையில் என்ன நடக்கிறது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நாம் அறிந்திருக்கவேண்டும். ராணுவ தளபதிகள் அந்த தகவல்களைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைகளில், சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் தீர்வு காணப்படவில்லை. ஆகவே இருதரப்பு ராணுவ அதிகாரிகளின் பேச்சு வார்த்தை தீர்வு காணும் வரை தொடர்ந்து நடக்கும்.” எனக் கூறி உள்ளார்.