அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் ஆப்கனுடனான 20 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ஆப்கனிஸ்தானில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்த பைடன் இந்த மாத இறுதிக்குள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினார்.

அமெரிக்கப் படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கனில் அவர்களுக்காக உதவியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டது அமெரிக்கா.

கிடைத்த விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்த ஆபிகானியர்கள்

அமெரிக்காவின் இந்த முயற்சியை முறியடிக்க எண்ணிய தாலிபான்கள் கடந்த ஒருவாரத்தில் ஆப்கனின் பல்வேறு மாகாணங்களை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து தலைநகர் காபூலை நேற்று சுற்றிவளைத்த தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் ஆப்கனில் மீண்டும் ஒருமுறை ரத்தக்களரி ஏற்படுவதைத் தவிர்க்க எண்ணிய அதிபர் கனி நாட்டைவிட்டு வெளியேறினார்.

அதிபர் மாளிகைக்குள் தாலிபான்கள்

அதிபர் வெளியேறியதைத் தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தாலிபான் படையினர் நாடு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக அறிவித்தனர்.

ஆப்கானிஸ்தான் இப்போது தாலிபான்களின் வசம் சென்றுவிட்டதால் அந்நாட்டில் இருந்து ராணுவ விமானம் தவிர மற்ற பயனிகள் போக்குவரத்து விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கனைச் சேர்ந்த 20000 க்கும் மேற்பட்டோரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், காபூல் உள்ளிட்ட ஆப்கனின் பல்வேறு பகுதிகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் தாலிபன் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரடார்

2018 ம் ஆண்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரடார் ஆப்கனின் புதிய அதிபராக பொறுப்பேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆப்கானிஸ்தானை இனி இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே, ஆப்கனில் உள்ள தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து அமெரிக்காவில் உள்ள ஆப்கானியர்கள் தங்கள் குடும்பத்தினரை மீட்கக் கோரி வெள்ளை மாளிகை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கனை விட்டு அமெரிக்கா முற்றிலும் வெளியேறுவதற்கு முன் தாலிபான்கள் வசம் ஆட்சியை இழந்திருப்பது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.