காபூல்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள தாலிபான்கள், தங்களது கோர முகத்தை காட்டி உள்ளனர். பெண்கள் கல்வி மற்றும் வேலைவாயப்புக்கு தடை விதித்துள்ள தாலிபான்கள், மீண்டும் பழைய சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
கை, கால்களைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் ஆப்கானிஸ்தானில் தொடரும் என தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்துள்ளார். இது ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சமடைய செய்துள்ளது.
கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள் என்றும் திருடர்களின் கைகளை வெட்டுதல் உள்பட பல்வேறு தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் தாலிபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கானி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. பெண்கள் உள்பட அனைவரும் சம உரிமை வழங்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் அதிபர் மாறியம், புதிய அதிபர் ஜோ பைடன், ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. அமெரிக்க படைகள் மொத்தமாக வெளியே நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதனால் அதிபர் கர்சாய் வெளிநாட்டுக்கு தப்பினார்.
இதையடுத்து ஆப்கனில் ஆட்சியமைத்துள்ள தாலிபான்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. பழமைவாதிகளான தாலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளழடன், ஈரான் ஆட்சி முறையை கையாளப்போவதாக தெரிவித்து உள்ளனர். (ஈரானில் குடியரசு ஆட்சி முறையும், ஷரியத் சட்டங்களை கொண்ட கலவை ஆட்சி முறை நடைபெற்று வருகிறது.) பெண்கள்மீதான தடையை எதிர்த்து அந்நாட்டு பெண்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
ஏற்கனவே 1990களில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடத்தினர். அப்போது, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, பொதுவெளியில் மிக கொடூரமாக, மனிதாபிமானமற்ற முறையிலும், தலையை வெட்டுதல், கைகால்களை வெட்டுதல் போன்ற கொடூர தண்டனைகளை நிறைவேற்றினர்.
தற்போது மீண்டும், அதுபோன்ற தண்டனைகளை நிறைவேற்ற உள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தாலிபன் அமைப்பின் நிறுவனர் முல்லா நூருல்லாதுன் துராபி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஆப்கானிஸ்தானில் முன்பிருந்த அதே தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்படும். நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே.
மைதானங்களில் குற்றவாளிகளை நிற்க வைத்து நாங்கள் கொடுக்கும் தண்டனைகளை பிற நாட்டினர் விமர்சித்தார்கள். ஆனால், நாம் அவர்களது தண்டனை முறை களையோ, சட்டங்களையோ விமர்சிக்கவில்லை. எங்கள் சட்டங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை”
என்ன மாதிரியான தண்டனைகள் எல்லாம் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இஸ்லாம் சட்டங்களுக்கு உட்பட்டு தண்டனைகள் வழங்குகிறோம். கைகளைத் துண்டிப்பது பற்றி பல்வேறு விமர்சனங்களும் நிலவுகின்றன. ஆனால், கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார்.
ஆப்கன் மக்கள் மத்தியில் ஊழல் மலிந்துள்ளது. பணத்தை அபகரிப்பது போன்ற பழக்கமும் உருவாகி உள்ளது. எங்கள் தண்டனை முறை அமைதியையும், நிலையான தன்மையையும் கொண்டு வரும். நாங்கள் எங்கள் சட்டத்திட்டங்களை அமல்படுத்திய பின்னர் அதனை யாரும் உடைக்க நினைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
தாலிபான் நிறுவனர் நூருல்லாதுன் துராபியின் இந்த பேச்சு மக்களிடையே கடுமையான பதற்றத்தையும், அச்சத்தையும் உருவாக்கி உள்ளது.
முந்தைய ஆட்சியின் போது தாலிபான்கள் குற்றவாளிகளுக்கு காபூல் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் தான் தண்டனைகளை நிறைவேற்றுவார்கள். கொலைக் குற்றவாளிகள் தலையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவார்கள். பொதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களே இந்தத் தண்டனையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவார்கள். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டால் கையை வெட்டுவார்கள். நெடுஞ்சாலையில் திருட்டில் ஈடுபட்டால் கால் துண்டிக்கப்படுவார்கள். அதுபோலவே மீண்டும் தண்டனைகளை நிறைவேற்ற தாலிபான்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுமுகிறது.