சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை போக்கவும், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கவும், உயர்ந்து வரும் மின் கட்டணத்தை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சென்னைவாசிகள் மட்டுமின்றி கிராம மக்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது. அதேபோல் கிராமங்களிலும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வரும் என்ற ஒரு கருத்து மக்களிடையே இருக்கிறது.
எனவே, தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி மின்சாரத்தில், மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். கொரோனா ஊரடங்கால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்கள் தவித்து வருவதால் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் உயர்ந்து வரும் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.