சென்னை: வழக்கு விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் சாட்சிகள் எவ்வாறு பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என பாடம் எடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பொதுவாக வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையே இன்றுவரை காணப்படுகிறது. காவல் நிலையத்தில் வைத்தே சாட்சிகள் நீதிமன்ற விசாரணையின்போது எப்படி பேச வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என போலீசார் மிரட்டியே நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். போலீசார் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும், காவல்துறையினர் ஒருதரப்பு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில், குற்றவாளிகளை சேர்க்கப்பட்ட இருவரிடம் போலீசார் மிரட்டி, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பான குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகளான அபய் எஸ். ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, ‘இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி கூறுபவா்கள் என்ன பேச வேண்டும் என காவல் நிலையத்திற்குள் வைத்தே போலீஸாா் ‘பாடம்’ நடத்தியுள்ளனா்.
நீதித்துறையில் போலீஸாா் இவ்வாறு தலையீடுவது அதிா்ச்சியளிக்கிறது.
‘தமிழகத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றில் சாட்சிகள் என்ன பேச வேண்டுமென காவல் நிலையத்தில் வைத்து போலீசார் ‘பாடம்’ நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியதுடன், இதை காவல்துறை உயர்அதிகாரிகள் எப்படி அனுமதிக்கின்றனர் என கேள்வி எழுப்பினர்.
சம்பவம் நடந்த இடத்தில் தாங்கள் இல்லை என குற்றம்சாட்டியவா்கள் கூறியுள்ளனா். அதை உறுதிபடுத்தும்விதமாக சாட்சிகளிடம் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. இதை கவனத்தில் கொள்ளாமல் கீழமை மற்றும் உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டு உள்ளது.