ஓசூரில் விவாண்டா மற்றும் ஜிஞ்சர் ஹோட்டல்களை நிறுவ உள்ளதாக முன்னணி நட்சத்திர ஹோட்டலான தாஜ் குழுமத்தை நிர்வகிக்கும் இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் (IHCL) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஓரிரு நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள அந்நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு பசுமை நட்சத்திர விடுதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஓசூரில் 3 ஏக்கர் நிலத்தில் 150 அறைகள் கொண்ட விவாண்டா மற்றும் 200 அறைகளைக் கொண்ட ஜிஞ்சர் பிராண்ட் ஹோட்டல்களை உருவாக்கவுள்ளது.
ஓசூரில் நட்சத்திர விடுதிகளின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர விடுதிகளை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நாள் முழுவதும் உணவருந்தும் உணவகம், பார் மற்றும் அதிநவீன உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் மற்றும் வணிக நிகழ்வுகளுக்கான நிகழ்ச்சி அரங்குகள் ஆகியவற்றுடன் இந்த விடுதிகளை அமைக்கவுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய வணிக மையமாக உருவெடுத்துள்ள ஓசூர் உள்கட்டமைப்பிலும் வளர்ந்து வருகிறது. இதையடுத்து ஓசூர் தொழிற்பேட்டைக்கு அருகில் அமையவிருக்கும் இந்த இரண்டு ஹோட்டல்களும் பெருகிவரும் ஆலோசனை கூட்டங்கள், கார்போரேட் ஈவென்ட்டுகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்யும் என்று IHCL நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட், சோனா மெகாடெயின்மென்ட் மால்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து இரண்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
இதனுடன் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் 22 ஹோட்டல்களை இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் நிர்வகித்து வருகிறது அவற்றில் ஆறு ஹோட்டல்கள் தற்போது கட்டப்பட்டு வருகிறது.