2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது.

இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி வரலாறு படைத்தது.

இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்து அபாரமாக கேட்ச் பிடித்த சூரியகுமார் யாதவ் தான் இந்திய அணியின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்றால் அது மிகையாகாது.

இருந்தபோதும், அவர் கேட்ச் பிடிக்கும் போது அவரது கால் பவுண்டரியை உரசியதாக தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் சூரியகுமார் யாதவின் கால் பவுண்டரி லைனை தொடவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதேவேளையில், ” பந்தை நான் தூக்கிப் போட்ட போது பவுண்டரி எல்லையை தொடவில்லை என்பது எனக்கு தெரியும். இருப்பினும் பந்தை பிடிக்க மீண்டும் வரும் போது எனது கால் பவுண்டரியில் பட்டுவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன். எனவே அது நியாயமான கேட்ச் என்பது எனக்கு தெரியும்” என்று பேட்டி ஒன்றில் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் தினம்தோறும் ஸ்பெஷல் பயிற்சிகளை எடுப்பதாகக் கூறிய சூரியகுமார் யாதவ், ஒருவேளை ரோஹித் சர்மா கொஞ்சம் அருகில் இருந்திருந்தால் பவுண்டரிக்குள் செல்லாமல் பந்தை அவரிடம் தூக்கி போட்டிருப்பேன் என்றும் கூறினார்.