சென்னை: நடிகர் விஜயின் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்கும் வகையில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை த.வெ.க. அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது. இதற்காக பந்தல் அமைப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தவெக சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தவெக மாநில மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்படுள்ளன என்று அறிக்கை வெளியாகி உள்ளது.
அதன்படி, மாநாடு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகன நிறுத்தக் குழு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் மட்டும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 200க்கும் அதிகமான நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மாநாட்டிற்காக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாநாட்டிற்கு வருபவர்களை அழைத்து வந்து, அழைத்து செல்லவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை செய்து கொடுக்கவும், இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட் டிருப்பதாக கூறப்படுகிறது.