சென்னை,

தி.நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி உள்ளதாக கூறப்படுகறிது.

சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடை சென்னை சில்க்ஸ். இதன் மேல்மாடியில் துணிக்கடையில் வேலை செய்யும் ஊழியங்கள் தங்கி உள்ளனர்.

இன்று  அதிகாலை கடையினுள் திடீரென  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 4.45 மணிக்கு தீப்பற்றியது. கடையின் அடித்தளத்தில் இருந்து தீ பிடித்து எரிந்ததால், தீ அணைக்க  தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடினர்.

தீயின் வெப்பம் காரணமாக கடையின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கி  விழுந்தன.

 

கடையின் 7 வது மாடி வரை பரவியுள்ள புகையை ரசாயன கலவை மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  5 மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ கட்டுபடுத்தப்பட்டது.

இருந்தாலும் கடையின் உள்ளே சில இடங்களில் தீ எரிந்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தீ எரிந்து வருவதால், அப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி தீவிபத்து ஏற்பட்ட கடையை சுற்றி உள்ள 100 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு, அங்கு தங்கி இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடையின் 7வது மாடியில் தங்கியிருந்த ஊழியர்கள் 11 பேரை கிரேன் மூலம் தீயணைப்புத்துறை யினர் பத்திரமாக மீட்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் கூறுகின்றன.

தீ விபத்தை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

அந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் நுழைய வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.