சென்னை: ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் இலவச அரிசி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரமலாத் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் வாடிக்கை. ஒவ்வொரு இஸ்லாமியரும் அந்த மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக 30 நாட்கள் நோன்பு வைக்கின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், ரமலானின் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் இருந்து மாலை வரை, மாத காலத்திற்கு நோன்பு இருப்பார்கள். இந்த ஆண்டு, ரமலான் நோன்பு பிப்ரவரி 28, 2025 வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது. அன்று மாலையில் தொடங்கி மார்ச் 29, 2025 சனிக்கிழமை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில் நோன்பு இருக்கும் மக்களுக்காக மசூதிகளால் நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மதிப்பு ரூ.18.41 கோடி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
