அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம் சரிவர கொண்டு சேர்க்கப்படவில்லை என்றும், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்றும் அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் தோல்வி ஏற்படாதவாறு கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்போம். எங்களின் பிரசாரங்களை மக்கள் ரசிக்கவில்லை என்பது இந்த தேர்தலில் தெரிகிறது.

என்னை பார்க்கும் பொதுமக்கள் ‘உங்களுக்குத்தான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று கூறுகிறார்கள். கிராமங்களில் என்னை மக்கள் அ.தி.மு.க. கட்சிக்காரராகவே பார்க்கிறார்கள். இரட்டை சிலை சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட சின்னமாகவே உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்வியை வைத்து எதிர்காலத்தை முடிவு செய்து விட முடியாது” என்று தெரிவித்தார்.