டில்லி
இந்த மாதம் முதல் சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை இந்திய அரசுக்கு அளிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இருந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். அந்நாட்டு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் பணப் பரிவர்த்தனைகள் ரகசியமாக இருக்கும் என்பதால் பலரும் தங்கள் கருப்புப் பணத்தை முதலீடு செய்ய அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருந்தனர். இவ்வாறு சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசு முயன்று வருகிறது
கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக பதவி ஏற்றதும் இந்த சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் மற்றும் தொகை குறித்த பட்டியல்களைப் பெறப் பெரிதும் முயன்று வருகிறது. அத்துடன் இந்த வங்கிகளில் உள்ள கணக்கில் இருக்கும் பணத்தைக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியனுக்கு ரூ.1.5 லட்சம் அளிக்கப் போவதாக மோடி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. அதைப் பாஜக மறுத்தது ஆயினும் சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்ட பேச்சு வார்த்தையின் போது இது குறித்து விவாதிக்கப்ப்பட்டுள்ள்து. அப்போது சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தங்கள் நாட்டில் உள்ள வங்கிகளில் இந்திய நாட்டினர் வைத்துள்ள கணக்குகள் பற்றிய விவரங்கள் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளனர் இந்த விவரங்கள் வரும் மாதத்தில் இருந்து இந்தியாவுக்கு அளிக்கப்பட உள்ளன.