பெர்ன் :

ஸ்விசர்லாந்து நாட்டில் உள்ள பனிமலையில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வீரர்கள் பனிசறுக்கில் ஈடுபடுவது வழக்கம். இங்குள்ள வெர்பியர் பகுதிக்கு மட்டும் ஐந்தில் ஒரு பங்கு பனிச்சறுக்கு வீரர்கள் குளிர்காலத்தில் சுற்றுலா வருவார்கள்.

கொரோனா பரவல் நேரத்திலும், இங்குள்ள விடுதிகள் பனிச்சறுக்கு வீரர்களுக்காக திறந்திருந்தது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட இங்குள்ள விடுதிகளை தேர்வு செய்த 420 க்கும் அதிகமான பனிச்சறுக்கு வீரர்களில் தற்போது சுமார் 15 பேர் மட்டுமே உள்ளனர்.

உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டிசம்பர் 20 முதல் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடைவிதித்துள்ள சுவிஸ் அரசு, 14 டிசம்பர் முதல் இங்கு வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களை பரிசோதனை செய்து தனிமை படுத்த முடிவு செய்தது.

விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க வந்தவர்களுக்கு தனிமைப்படுத்தும் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் விடுதிகளை ஓசையின்றி காலி செய்துவிட்டு வெளியேறினர்.

தங்களுக்கு பாதுகாப்பான, அதிக கெடுபிடிகள் இல்லாத ஐரோப்பிய நாடுகள் அல்லது இங்கிலாந்தை அடைந்ததும், தாங்கள் விடுதியை காலி செய்துவிட்டதாகவும், தங்கள் பணத்தை திரும்ப அளிக்குமாறும் கோரிக்கை அனுப்பினர்.

பல விடுதிகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு அவர்கள் தங்கியிருந்த அறை வாசலில் அப்படியே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், இதனை தொடர்ந்து, சோதனை மேற்கொண்ட விடுதி உரிமையாளர்கள், 200 க்கும் அதிகமானோர் எந்த தகவலும் வழங்காமல் வெளியேறி சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

இதுபோல், வெளியேறியது இங்கிலாந்து பயணிகள் மேல் அவப்பெயரை ஏற்படுத்திவிட கூடும் என்று சிலர் கூறினாலும், சூழ்நிலை கைதியாக இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள்.

அக்டோபர் மாதம் வெளியான ஒரு அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய நேரத்தில், ஆஸ்திரிய நாட்டில் உள்ள பனிச்சறுக்கு விடுதிகளில் தங்கியிருந்த ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள பனிச்சறுக்கு விடுதிகள் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதித்துள்ளது.