ஜெய்ப்பூர்
இந்திய பாகிஸ்தான் போரையொட்டி மைசூர் பாக் உள்ளிட்ட இனிப்புகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகி 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்புகளின் பெயர்கள் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல இனிப்புக்கடையான தியோஹார் ஸ்வீட்சின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின்
“தேசபக்தியின் உணர்வு எல்லையில் மட்டும் இருக்கக்கூடாது, ஒவ்வொரு குடிமகனிடமும் இருக்க வேண்டும். அதனால்தான் எங்கள் இனிப்புகளின் பெயர்களில் இருந்து ‘பாக்’ என்பதை நீக்கி, அதற்கு பதிலாக கலாச்சார ரீதியாக எதிரொலிக்கும் மற்றும் தேசபக்தி கொண்ட மாற்றுகளை மாற்ற முடிவு செய்தோம். இந்த மாற்றத்தைச் செய்ய வாடிக்கையாளர்கள் தாங்களாகவே எங்களை வலியுறுத்தினர்”
என்று தெரிவித்துள்ள்ர்.
அந்த கடையின் மிகவும் பிரத்யேக படைப்புகளான – தங்கம் மற்றும் வெள்ளி இலைகளால் நிரப்பப்பட்ட ஸ்வர்ன் பாஸ்ம் பாக் மற்றும் சாண்டி பாஸ்ம் பாக் ஆகியவை ஸ்வர்ன் ஸ்ரீ மற்றும் சாண்டி ஸ்ரீ என்று மறுபெயரிடப்பட்டுள்ளது. தற்போது ஜெய்ப்பூர் முழுவதும் உள்ள பல இனிப்பு கடைகள் தியோஹாரின் வழியைப் பின்பற்றப்படுகிறது.