ஸ்வீடன்
இன்று ஸ்வீடன் ஸ்கேன்(Skåne county)இல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழர்கள் கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தினார்கள். ஸ்வீடனில் பல நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை நடத்தியதாக கூறினார் இதன் ஒருங்கிணைப்பாளர் திரு. கண்ணன் மாணிக்கம்.
மேலும் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இளைஞர்களால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக எங்கள் ஆர்ப்பாட்டம் இருந்தது என கூறினார். இந்த நிகழ்வில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஸ்வீடன் லுண்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் என்றும் மற்றவர்கள் ஸ்வீடனில் பணி நிமித்தமாக வசிப்பவர்கள் என்று கூறினார். வெவ்வேறு இடங்களிலிருந்தாலும் சிரமம் பார்க்காமல் குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டவர்களுக்கு நன்றியும் கூறினார்.
நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எந்த நாட்டிற்கு சென்றாலும் விட்டு தர மாட்டோம் எனவும் ஜல்லிக்கட்டு என்பது தமிழனின் பெருமை, அந்த அடையாளத்தை அழிப்பவர்களுக்கு எங்களது எதிர்ப்பை எங்கிருந்தாலும் தெரிவிப்போம் எனவும் உறுதிபட கூறினார்.தமிழ்நாட்டில் இருந்திருந்தால் நிச்சயம் இளைஞர்களுடன் போராடி இருப்போம் எனவும் வெளிநாட்டில் இருப்பதால் எங்களால் ஆன ஆதரவை இது போன்ற சிறிய நிகழ்வுகளின் மூலம் தருகிறோம் எனவும் திரு. கண்ணன் கூறினார்.