சென்னை:
சுவாதி கொலையான அன்று அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். உயிருக்கு போராடிய அவருக்கு முதலுதவி அளிக்கவில்லை என்று அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் ரத்தவெள்ளத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே கிடந்தது. உடலை மூடக்கூட வெகு நேரமாக போலீசார் முயற்சி எடுக்க வில்லை. உடலின் அருகிலேயே சுவாதியின் பணி அடையாள அட்டை கிடந்தும், அதிலிருந்த முகவரிக்கு உடனடியாக தகவல் சொல்லப்படவில்லை. துணி கூட போர்த்தாமல் கிடந்த சுவாதியின் உடலை, ரயில் நிலையத்தில் வரும் பயணிகள் அச்சத்துடன் பார்த்தபடியே கடந்து சென்றனர்.
அன்று அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்னொரு தீடீர் மரணமும் நடந்தது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஆதிகேசவன்(70). வால்டாக்ஸ் சாலையில் ஸ்டீல் பட்டறையில் வேலை செய்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தினமும் காலை 8-30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்வார்.
கடந்த வெள்ளிக்கிழமையும் வழக்கம்போல நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வந்தவர், அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் உடலைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்படியே சுவற்றில் சரிந்து உட்கார்ந்துள்ளார். வாயிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது.
ஆனால் அங்கு சுவாதி பலியால் ஏற்பட்ட களோபரத்தில் ரயில்வே நிர்வாகமோ காவலர்களோ ஆதிகேசவனை கண்டுகொள்ளவில்லை. அவருக்கு முதலுதவி அளிக்க முன் வரவில்லை.
ஆதிகேசவன் சரிந்து விழுந்துள்ளார். அதன் பிறகு அவரது வீட்டுக்கு தகவல் அனுப்பினர். அவரது மகன் விரைந்து வந்து ஆதிகேசவனை அருகிலுருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பில் பலியான ஆதிகேசவனின் மகன் கோதண்டராமன், “சுவாதியின் உடலை பார்த்ததால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்தில் விழுந்தார். நெஞ்சுவலியால் துடித்த அவருக்கு ரயில்வே போலீசார் முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் விட்டு விட்டனர். வாயில் வழிந்த ரத்தத்தை கூட துடைக்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“பொதுமக்கள் அதிகளவில் கூடும் ஒரு ரயில் நிலையத்தில் அடிப்படை மருத்துவ வசதி அளிக்க எந்த ஏற்பாடும் இல்லை. இதை ரயில்வே துறை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.