சென்னை:
ஜூன் மாதம் 24 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று எப்போதும் போல்தான் பொழுது விடிந்தது. சென்னையின் பல பகுதிகள் அமைதியாகவும், வேலைக்கு செல்ல ஆயத்தமாக மக்கள் அவரவர் வீடுகளில் தயாராகும் நேரத்தில் சென்னை  நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் மட்டும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது,
அதற்கு காரணம் சுவாதி படுகொலைதான். அதிகாலையிலேயே ரெயில்நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடர் கொலைகளை போல் சுவாதி கொலையையும் நம்மால் புறந்தள்ளிவிட முடியாது, ஜூன் 24ந் தேதி சுவாதி கொலையானவுடன் ஆரம்பமான சர்ச்சை ராம்குமார் மரணமடைந்த பிறகும் நீடித்து கொண்டே செல்கிறது. இப்போதைக்கு இந்த சர்ச்சை முடியப்போவதுமில்லை….
ramkumar-maruder
சுவாதி கொலையான ஜூன்.24 முதல்  செப்.18 வரை…, உங்கள் பார்வைக்கு
ஜூன் 24 :
பெண்பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6. 45 மணியளவில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஜூன் 27 :
சுவாதி கொலை வழக்கு, ரயில்வே காவல்துறையிடமிருந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதே நாளில், சுவாதி கொலை தொடர்பாக ஒரு சிசிடிவி வீடியோவை, காவல்துறை வெளியிட்டது.
ஜூலை 1:
சுவாதி கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரியை போலீஸார் கைது செய்ய முயன்றபோது பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்றதாக கூறி ராம்குமாரை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டது. உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறினர்.
ஜூலை 4:
அதிகாலை 3 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் ராம்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம்சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அதே நாளில் எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜூலை 5:
ராயப்பேட்டை மருத்துவமனையில்  சிகிச்சை முடிந்து  மாலை 4 மணி அளவில்  புழல் சிறைக்கு  கொண்டு செல்லப்பட்டார்.
ஜூலை 6:
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கிருஷ்மூர்த்தி என்ற வழக்கறிஞர் தாமாக முன்வந்து  ராம்குமாரின்  சார்பில் ஜாமின் மனு  தாக்கல் செய்தார். அந்த மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜுலை 12:
காலை 10. 30 மணி அளவில் நடந்த அடையாள அணிவகுப்பில், சுவாதியின் தந்தை, ராம்குமாரை அடையாளம் காட்டியதாக கூறப்பட்டது.
ஜூலை 13:
ராம்குமாரை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்ட்ரேட் அனுமதியளித்தார். புதன்கிழமை மாலை நீதிமன்ற காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு அழைத்து செல்லப்பட்டார் ராம்குமார்.
ஆகஸ்ட் 19:
ராம்குமாரின் தாய் புஷ்பம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
செப்டம்பர் 2:
சி.பி.ஐ விசாரணை கோரிய ராம்குமார் தாயாரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
செப்டம்பர் 18 :
கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சமையல் அறையில்  மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ராம்குமார்  கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்த வேளையில் ராம்குமார் மரண செய்தி அனைவரும்பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
ராம்குமாரின் மரணத்தோடு சுவாதி கொலை வழக்கு முடிந்து விடக்கூடாது, சுவாதி கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணமும், உண்மை குற்றவாளியும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.