சென்னை:
“சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை தான் அறிந்தது போல ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கும் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்” என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் அளிக்கப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வந்த அந்த பதிவை தான் உருவாக்கவில்லை என்று ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார். அந்த பதிவையும் நீக்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிலால் மாலிக் என்பவர்தான் கொலையாளி என நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம், “ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இன்னார்தான் கொலையாளி என்று தெரியும் என்றால் அதை காவல்துறையிடம் தெரிவிக்காதது தவறு. அவருக்கு சம்மன் அனுப்பி காவல்துறை விசாரிக்க வேண்டும். இது குறித்து சென்னை காவல்துறை ஆணையாளரிடம் இன்று மனு கொடுக்கப்போகிறேன்” என்று அறிவித்தார்.
இதையடுத்து, ஒய்.ஜி. மகேந்திரன், “அந்த குறிப்பிட்ட பதிவை நான் உருவாக்கவில்லை. வேறு பக்கத்தில் இருந்த பதிவை நான் பகிர்ந்தேன். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தடா ரஹீம், ஒய்.ஜி. மகேந்திரன் அந்த பதிவை பகிர்ந்தது போல தெரியவில்லை. அவேரே பதிந்தது போலத்தான் இருக்கிறது. தவிர “பிறரது பதிவு என்றால், அதை பதிந்தவர் பெயரை குறிப்பிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து தனது கருத்து போல் பதிவிட்டு விட்டு இப்பொழுது, இல்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்.
நேற்று பதிவிட்டதில் இருந்து மவுனமாக இருந்துவிட்டு, இப்போது புகார் கொடுக்கப்போகிறேன் என்றதும் மறுப்பு தெரிவிக்கிறார்.
ஒருவேளை அது அவரது பதிவு இல்லை என்றாலும் ஒரு வதந்தியை பரப்புவதும் சட்டப்படிக் குற்றமே.. இந்திய தண்டனைச் சட்டம் 505இன் கீழ் 3 வருட சிறைத் தண்டனை கொடுக்கலாம்.. ஆகவே இன்று இரவு சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒய்.ஜி. மகேந்திரன் பேஸ்புக் பதிவு குறித்து மனு அளிக்க இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தனது விளக்கத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒய்.ஜி. மகேந்திரன், முந்தைய தனது பதிவையும் நீக்கிவிட்டார்.