சென்னை,
தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கு குறித்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை எடுத்த இயக்குனர், சுவாதியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற மென்பொறியாளர் கடந்த 2016 ஜூன், 24 காலை, 6:30 மணிக்கு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம நபரால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில்,ராம்குமார் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சுவாதி – ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே இயக்குனர் எஸ்டி.ரமேஷ் செல்வன் என்பவர், சுவாதி கொலை சம்பவத்தை படமாக எடுத்துள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், சுவாதி படத்திற்கு தடை விதிக்க கோரி சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் சென்னை சாந்தோமில் உள்ள டிஜிபி. அலுவலகத்தில் கொடுத்திருந்தார்.
அதில் என் அனுமதி இன்றி என் மகள் கொலை பற்றி திரைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் படம் வெளிவந்தால் என் குடும்பத்தினர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் எனவே படத்தை தடை செய்வதோடு, படத்தை எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதையடுத்து இயக்குநர், படத்தை சுவாதி பெற்றோருக்கு போட்டு காட்டுவேன் என்று கூறியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு டி.ஜி.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
“ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை பற்றி படம் எடுப்பது சட்டவிரோதம். வழக்கு நிலுவை யில் உள்ள ஒரு விஷயத்தை படமாக எடுத்தால் அந்த விசாரணையை பாதிக்கும் என்பதால் இது நீதிமன்ற அவமதிப்பு. எனவேதான் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.
விரைவில் அவர் கைது செய்யப்படலாம்“ என்கிறார் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர்.