
ஆனைக்கட்டி
கோயம்பத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் மலைவாழ் மக்களுக்கு கழிவறை கட்டுவதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி உள்ளனர்.

ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனிடம் அவர் மனைவி கழிவறை கட்டித் தந்தால் தான் திருமணம் செய்வேன் எனக் கூறுவார். அவரும் அரசு உதவியுடன் கழிவறை கட்ட தொடங்குவார். ஒப்பந்தக் காரர்கள் குடியரசுத் தலைவரிடம் காட்ட அறைகுறையாக ஒரு கழிவறையைக் கட்டி விட்டு அதனால் கதாநாயகன் மனைவி காயமடைவார். இது நிழலான சம்பவம், ஆனால் நிஜத்தில் வேறு மாதிரி நடந்துள்ளது.
ஆனைக்கட்டி பகுதியில் சுமார் 45 குடும்பங்களுக்கு கழிவறை கட்ட நிதி ஒதுக்கீடு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த 45 குடும்பங்களுக்கான கழிவறை கட்டித் தரப்படவில்லை என அங்குள்ள மக்கள் கூறி உள்ளனர்.
திட்டப்படி இந்த கழிவறைகள் முழுமையாக கட்டப்பட்டு அந்தக் கழிவறை முன் பயனாளிகள் நிற்கும் புகைப்படம் அனுப்பிய பின்னரே மானியம் வழங்கப்படும். அதனால் ஒரே ஒரு கழிவறையை மட்டும் கட்டி விட்டு அதற்கும் கதவு அமைக்காமல் அனைத்து மக்களையும் அந்தக் கழிவறை முன்பு நிற்க வைத்து புகைப்படம் எடுத்து ஒப்பந்தக்காரர் அனுப்பி உள்ளார்.
அதன் பின் ஒப்பந்தக்காரர் அந்த பகுதி மக்களிடம் செக் புக்கில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். மானியம் வந்த பின் அனைவருக்கும் கழிவறை கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார். இந்த கழிவறைகளுக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு தவணையாக மானியம் வந்துள்ளது. ஆனால் இதுவரை கழிவறை கட்டித் தரப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்
[youtube-feed feed=1]