டில்லி

குல்பூஷன் ஜாதவ் மனைவி காலணி குறித்து பாகிஸ்தான் அபத்தமாக குற்றம் சாட்டுவதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசி உள்ளார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூஷன் ஜாதவ்.   இவரை இஸ்லாமாபாத் சிறையில் அவரது தாயும் மனைவியும் சந்தித்து பேசி உள்ளனர்.  இந்த நேரத்தில் அவர்கள் இருவரும் மோசமாக நடத்தப் பட்டதாகவும்  ஜாதவின் மனைவியின் காலணி திருப்பித் தரவில்லை எனவும் புகார்கள் எழுந்தன.   பாக் தரப்பில் ஜாதவின் மனைவியின் காலணியில் மைக்ரோ சிப், கேமிரா, மற்றும் ரிகார்டர் பொருத்தப் பட்டிருந்ததாக கூறப்பட்டது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.  அவர், “மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவை அவர் தாயும் மனைவியும் சந்தித்துள்ளனர்.  முன்னேற்றமான ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டிய இந்த சந்திப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.  இரு தரப்பிலும் ஒப்புக் கொண்ட புரிந்துணர்வின் அடிப்படைக்கு எதிராக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.  சுமார் 22 மாதம் கழித்து ஒரு மகனை தாயும், ஒரு கணவனை மனைவியும் சந்திக்கும் உணர்வு பூர்வமான சந்திப்பு இது.  இதை பாகிஸ்தான் தனது தவறான பிரசாரத்துக்கு பயன் படுத்தி விட்டது.

அவர்களுடன் சென்ற இந்தியத் துணை தூதரை அனுமதிக்காமல் இவர்களை மட்டும் அனுமதித்துள்ளனர்.   ஜாதவின் மனைவி மற்றும் தாயாரின் பொட்டை அழிக்கச் சொல்லி, தாலியை கழற்றச் சொல்லி அதற்குப் பின் அவர்களை ஜாதவ் சந்தித்துள்ளார்.  ஜாதவ் தன் தாயைப் பார்த்து அதிர்ந்து போய் தனது தந்தை எப்படி இருக்கிறார் என கேட்டுள்ளார்.   கணவன் இறந்த் பின்பு தான் ஒரு இந்துப் பெண் தனது பொட்டு மற்றும் தாலியை அகற்றுவார்.   ஆனால் அந்தத் தாய் கூறியதை பாக் அதிகாரிகள் ஏற்கவில்லை.

ஜாதவின் மனவியின் காலணியில் மைக்ரோ சிப், காமிரா என பல பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சொல்வது மிகவும் அபத்தமானது.   அவர் ஏற்கனவே விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனைக்குப் பின்னரே பாகிஸ்தான் சென்றுள்ளனர்.   அந்தக் காலணியில் ஏதாவது இருந்திருந்தால் அந்த சோதனையின் போதே தெரிந்து இருக்கும்.  ஜாதவின் குடும்பப் பெண்கள் இவ்வாறு நடத்தப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது” என கூறி உள்ளார்.

சுஷ்மாவின் இந்த உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  மாநிலங்கள் அவை எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத்,  “ஜாதவின் தாய் மற்றும் மனைவிக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை நமது இந்தியர்கள் அனைவருக்குமே ஏற்பட்டதாகும்.   நாம் இதை பொருத்துக் கொள்ளக் கூடாது.   இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.