ஆக்ரா
ஆக்ரா அருகில் உள்ள ஃபதேபூர் சிக்ரியில் ஒரு சுவிஸ் தம்பதியர் தாக்கப்பட்டுள்ளனர்.
ஆக்ரா நகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள நகரம் ஃபதேபூர் சிக்ரி. இந்த நகரம் 1572 முதல் 1585 வரை முகலாய அரசின் தலைநகரமாக இருந்தது. அக்பர் ஆட்சி செய்த நகரம் இதுவே ஆகும். தாஜ்மகால் அளவுக்கு புகழ் பெறவில்லை எனினும் இந்த நகருக்கும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை அதிகமாகவே இருக்கும்.
அந்த நகரைக் காண வந்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதியர் குவெண்டின் ஜெர்மி கிளர்க் (வயது 24) மற்றும் மேரி டிரோஸ் (வயது 24). இவர்கள் இருவரும் ஃபதேபூர் சிக்ரியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு ரெயில்வே ட்ராகை ஒட்டி நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் அந்தப் பெண்ணுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்றுள்ளனர். அதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் நால்வரும் இருவரையும் கழிகளாலும், கற்களாலும் தாக்கி உள்ளனர்.
இதில் கிளர்க் மண்டை உடைந்துள்ளது. டிரோஸ் இடது கை எலும்பு முறிந்துள்ளது. இருவரும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை உடனடியாக பார்வையிட்டு சிகிச்சை பற்றி விசாரிக்க சுஷ்மா ஸ்வராஜ் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உ பி மாநில அரசிடம் இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை தனக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரும் அடையாளம் காணப்பட்டு அதில் ஒருவரை ராஜஸ்தான் – உ பி எல்லைப் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இது குறித்து சுற்றுலா வழிகாட்டி ஒருவர், “ஏற்கனவே தாஜ்மகால் பற்றிய சர்ச்சைகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இது போல தாக்குதல்களும் நடைபெற்றால் ஆக்ராவுக்கு சுற்றுலாப் பயணிகள் வர அஞ்சும் நிலை ஏற்படும். யோகி இதில் உடனடியாக தலையிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.