சூரியனார் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது.
கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.
தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரிய பகவான் பார்வை அளிக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். ஆகையால் பார்வை குன்றியர்களும், கண்நோய் உடையவர்களும் இங்கு வந்து வழிப்பட்டு பலன் பெறுகிறார்கள். அது மட்டுமல்ல முழு முதல் கடவுளாக சூரியன் இங்கே கருவறையில் அருள் பாலிக்க இது ஒரு நவக்கிரகக் கோவிலாக மலர்ந்துள்ளது.
சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சூரியனார் கோவில் வளாகத்தில் சுற்றாலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது.
பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார். சுக்கிரதிசை, குரு திசை, சனி திசை, ராகு திசை, கேது திசை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த தோஷம் நீங்க அந்தந்த தெய்வங்களை வேண்டி விரதம் மேற்கொண்டு இங்கு வந்து வழிபடுகின்றனர்.