ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் ‘குரூப் ஏ’-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஓமனுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தை செப்டம்பர் 19ம் தேதி அபுதாபியில் விளையாட உள்ளது.

புள்ளிபட்டியலில் ‘குரூப் ஏ’-வில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இதே குழுவில் உள்ள பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை.

இருந்தபோதும் போட்டி முடிந்த பின் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகொடுக்கும் சம்பிரதாயம் நடைபெறாதது சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்ட வீடியோவால் பேசுபொருளானது.

இந்தியாவின் இந்த சிறுபிள்ளைத்தனமான செய்கையைக் கண்டித்து போட்டியில் இருந்து விலகப்போவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெறப்போவதில்லை என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தீர்மானித்துள்ளதாக பிடிஐ-யை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அணி இன்று நடைபெற உள்ள போட்டியில் ஐக்கிய அரபு அணியை எதிர்கொள்கிறது.

இதைத் தொடர்ந்து செப். 20 முதல் 26 வரை இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் கலந்துகொள்ளும் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.

குரூப் ஏ பிரிவில் முதல் இரண்டு இடத்தில் உள்ளதால் சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்புள்ளது.

சூப்பர் 4 சுற்றில் பெறும் புள்ளிகளை வைத்து செப். 28ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பங்கேறக உள்ள அணிகள் தீர்மானிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ACC ஆகியவற்றின் தலைவர் மோஷின் நக்வி உடன் மேடையைப் பகிரப்போவதில்லை என்று இந்திய அணி தீர்மானித்திருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.