டில்லி

ணவன் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

சமீபத்தில் குடும்ப வன்முறை பற்றி எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு கூறுவதாவது :

”இந்தியாவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகிறது.  தற்போதைய நிலையில் கணவன் மேல் வன்முறைத் தாக்குதல் நடத்தும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மிகவும் கவலையை உண்டாக்குகிறது.   இது குறித்து சில உண்மை சம்பவங்களும் வெளி வந்துள்ளன.” என தெரிவித்துள்ளது.

அந்த உண்மை சம்பவங்கள் பலவும் உருக்கமானவைகளே.

அவற்றில் முகுந்த் ராய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் அனுபவம் இதோ :

”எனக்கு 33 வயதாகிறது.   நான் எலெக்டிரிகல் எஞ்ஜினியராக பணி ஆற்றுகிறேன்.  உறவினர் மூலமாக எனது திருமணம் நடந்தது.   திருமணத்துக்கு இரண்டு மாதம் முன்புதான் நான் என் மனைவியை முதலில் பார்த்தேன்.  திருமணம் நடந்த உடனேயே அவளுடைய தகராறு ஆரம்பித்து விட்டது.

எதற்கெடுத்தாலும் கோபிப்பது அவள் வழக்கம்.   நான் வேலையில் இருந்து வர சிறிது தாமதம் ஆனாலும் அவள் ஆத்திரம் அடைந்து விடுவாள்.   அடிக்கடி ஃபோன் செய்துக் கொண்டே இருப்பாள்.  நான் வந்ததும் என் மேல் கிடைத்த்தை விட்டெறிவாள்.  அவள் வெளியே போக அழைக்கும் போது நான் களைப்பாக இருப்பதாக சொன்னாலும் ஆத்திரம் அடைவாள்.

எனது பெற்றோர்கள் இறந்து விட்டதால் எனது ஒரே செவிட்டூமை தம்பி என்னுடன் வசித்து வருகிறார். அவர் மனநலம் குன்றியவர்.  திருமணத்துக்கு முன்பு அவர் எங்களுடன் இருப்பதை ஒத்துக் கொண்ட என் மனைவி திருமணத்துக்குப் பின் அவரை வீட்டை விட்டு அனுப்பச் சொல்லி தகராறு செய்ய ஆரம்பித்தாள்.   எனது தம்பியை திட்டி அடிக்க ஆரம்பித்ததால் நான் அவரை ஒரு ஆசிரமத்தில் அனுமதித்துள்ளேன்.

எனது உடன் பணியாற்றும் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தவறாக சந்தேகப்பட்ட என் மனைவி எனது அலுவலகத்தில் வந்து அனைவர் முன்னிலையிலும் என்னை திட்டி அடிக்க வந்ததோடு,  அந்தப் பெண்ணையும் அடித்து அவமானப்படுத்தினாள்.   அப்படி எதுவும் இல்லை என அவளை சமாதானம் செய்த என் அலுவலக நண்பர்களை எனக்கு அந்தப் பெண்ணை கூட்டிக் கொடுப்பதே அவர்கள் தான் என கூறி சத்தமிடவும் அவளை அவர்கள் வெளியே தள்ளி விட்டனர்.  இது குறித்து அவள் என் அதிகாரிகளிடம் புகார் செய்து என்னை வேலையை விட்டு விலக்குமாறு கடிதமும் எழுதி உள்ளாள்.

தவிர நான் அவள் கூக்குரல் இடும் போது அமைதியாக இருந்தால் எனது காலணிகளை ஒளித்து வைத்து விடுவாள்.  எனது உடைகள் அனைத்தையும் நீரில் போட்டு நனைத்து விடுவாள்.   எனக்கு அலுவலகம் செய்ய முடியாமல் போகும்.    நான் அலுவலகம் செல்லும் நாட்களில் அங்கு மற்றவர்களிடம் ஃபோன் செய்து நான் வந்த நேரம், அங்கிருந்து கிளம்பிய நேரம் ஆகியவற்றை விசாரிப்பாள்.  நான் இவள் தொல்லை தாளாமல் வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.  எனது சிறிய தகப்பனார் மூலமாக அவளுடைய பெற்றோரிடம் பேசச் சொன்னேன்.  ஆனால் அவர்கள் அதை கண்டுக் கொள்ளவில்லை.

அக்கம் பக்கத்தினர் என் மீது பரிதாபம் கொண்டு அவர்கள் என் மனைவியின் பெற்றோரை வரவழைத்தனர்.   அதற்கும் டிக்கட் என்னை வாங்கி அனுப்பச் சொன்னார்கள்.  இங்கு வந்து 10-15 நாட்கள் அனைத்தையும் பார்த்தர்கள்.  ஆனால் முடிவில் நாங்கள் சொன்னால் சிறு வயதில் இருந்தே அவள் கேட்பதில்லை என சொல்லி விட்டு போய் விட்டார்கள்.

இதுவரை என் மனைவி 50 முறை போலீசுக்கு ஃபோன் செய்து நான் அவளை துன்புறுத்தியதாக சொல்லி இருக்கிறாள்.   ஆனால் போலீசார் அக்கம்பக்கம் விசாரித்ததில் அவள் தான் என்னை துன்புறுத்துகிறாள் என தெரிந்துக் கொண்டு அதன் பின் அவள் புகாரை ஏற்பதில்லை

தொல்லை தாளாமல் நான் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன்.   நீதிமன்றத்தில் நான் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும்,  என் ஒரே மகளை நான் கொல்ல முயன்றதாகவும்,  மன நலமற்ற மற்றும் நடமாட முடியாமல் இருக்கும் எனது தம்பி அவளை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறினாள்.   அதை நம்பாத நீதிபதிகள் அவளை மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

எனது மகளை என் மனைவியின் பெற்றோர் அழைத்துச் சென்று விட்டனர்.  சட்டப்படி பெண்களுக்கு குழந்தை மேல் அதிக உரிமை உண்டு என்பதால் என் மனைவியின் விருப்பபடி அவர்கள் குழந்தையை வளர்த்து வர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவன் மட்டுமே மனைவியை கொடுமை செய்கிறார் என பலரும் நினைக்கின்றனர்.   மனைவி கணவனை தாக்கினார் என்பதே ஒரு நகைச்சுவையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.   ஒரு கணவனின் மன உளைச்சலை யாராவது புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது கண்ணீர் கதையை நான் தெரிவிக்கக் காரணம். ” என அவர் தெரிவித்துள்ளார்.