டில்லி

ந்தியாவில் சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பின்படி 21.5% மக்களுக்கு மட்டுமே கொரோனா பரவலுக்கு எதிர்ப்பு சக்திகள் தென்படுகின்றன.

அகில உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத் தினசரி கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.    இது குறித்துப் பாதிப்பு அடையாதவர்களிடம் நாடு தழுவிய கணக்கெடுப்பு ஒன்றை ஐ சி எம் ஆர் நடத்தியது.  கடந்த வருடம் டிசம்பர் 17 முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை இந்த கணக்கெடுப்பு நடந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 18 வயதுக்கு மேம்பட்டோரில் 21.4% பேருக்கு ஏற்கனவே கொரோனா எதிர்ப்பு சக்திகள் காணப்பட்டுள்ளன.  அதைப் போல் 10 முதல் 17 வயது வரை உள்ளோரில் 25.3% பேருக்கும் இதே அறிகுறிகள் தென்பட்டுள்ளன.   எனவே அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் நகர்ப்புறங்களில் குடிசை பகுதிகளில் வசிப்போருக்கு 31.7% பேருக்கும் குடிசைகள் அல்லாத பகுதிகளில் வசிப்போரில் 26.2% பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது.   இவர்களில் 23.4% பேர் 60 வயதை தாண்டியவர்கள் ஆவார்கள்.  இதைத் தவிர 7147 சுகாதாரப் பணியாளர்களிடம் இரத்த மாதிரிகள் பெறப்பட்டுச் சோதிக்கப்பட்டதில் 25.7% பேருக்கு மட்டுமே கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட ஐசிஎம்ஆர் இயக்குநர் பலராம் பார்க்கவா மொத்தத்தில் இந்திய மக்களுக்கு 21.5% பேருக்கு மட்டுமே கொரோனா பரவலுக்கான எதிர்ப்பு சக்திகள் உள்ளன. அதிக அளவிலான மக்களுக்கு கொரோனா பரவும் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது.  எனவே இதன் மூலம் கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகம், உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.