நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்..
ஜெ. ஜெயலலிதா
ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங் களிலும் அதிகபட்சத்தை பார்த்தவர் முதலமைச்சராய் மறைந்த ஜெயலலிதா..
சினிமா, அரசியல், சட்டசபை கோட்டையில் முதலமைச்சர் பதவி, அப்பல்லோ ஆஸ்பிடல் அனுமதி , இறுதி யாத்திரைக்காக ராஜாஜி ஹால், நினைவிடத்திற்காக மெரீனா என ஆசான் எம்ஜிஆர் வழியிலேயே தனது பயணத்தையும் முடித்துக்கொண்ட விந்தையான பெண்மணி. .
சந்தியா என்ற பிரபல நடிகையின் மகளான அவருக்கு, வழக்கறிஞராக ஆசை. ஆனால் குடும்ப பொருளாதார சூழல் சினிமாவில் அரிதாரம் பூசியே ஆக வேண்டும் என்று வைத்துவிட்டது.. சிலரின் வற்புறுத்தலுக்காக சிறுமியாக சில படங்களில் தலைகாட்டிய வருக்கு தலைவிதி அப்படி ஆகிப்போனது
1964ல் கதாநாயகியாக சின்னத கொம்பே என்ற கன்னட படம்தான் முதல் படம். முதல் ஹீரோ. கல்யாண்குமார். இந்த படம்தான் தமிழில் சிவாஜி தேவிகா நடித்து முரடன் முத்து என ரீமேக் ஆனது. படத்தின் இயக்குநர் பி.ஆர் பந்துலு. ஆயிரத்தில் ஒருவன் படத்தை பின்னாளில் இயக்கினாரோ அதே பந்துலுதான். ஆனால் தமிழுக்கு ஜெயலலிதாவை கொண்டுவந்தவர் இயக்குநர் ஸ்ரீதர். தமிழில் முதல் படம் வெண்ணிற ஆடை… இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் அறிமுகம்.
ஜெயலலிதா மற்றும் நிர்மலா, வெண்ணிற ஆடை நிர்மலா என்று பெயர் அமைந்து போனவருக்கும் சரி, ஜெயலலிதாவுக்கும் சரி, திருமண வாழ்க்கை என்பது அமையாமல் போய்விட்டது என்பதுதான் பிந்தைய வினோதமான வரலாறு ஆனால் உண்மையிலேயே வெண்ணிற ஆடை படத்துக்கு ஜெயலலிதா இடத்தில் முதலில் தேர்வானது அசோகனின், இது சத்தியம் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியிருந்த நடிகை ஹேமாமாலி னிதான்.
ஹேமமாலினிக்கு அந்த வாய்ப்பு வாய்ப்பு நழுவிப்போக, அது ஜெயலலிதா மடியில் விழுந்தது. அப்போதுதான் பள்ளிப்படிப்பு முடிந்திருந்த ஒரு மாணவியால், பெண்மையின் அத்தனை உணர்ச்சிகளையும் இவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்த முடியுமா என, ஷுட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் ஸ்ரீதர் ஆடிப்போகிற அளவுக்கு இருந்தது வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவின் நடிப்பு திறமை.
ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த வெண்ணிற ஆடை படத்தை அவரே தியேட்டரில் பார்க்க முடியாது, ஏனெனில் அது வயது வந்தோர்க்கு மட்டுமான ஏ படம். கவர்ச்சிக்காக கொடுக்கப்பட்ட ஏ சான்றிதழ் அல்ல. மணமே ஆகாமல் விதவைகோலம் பூணும் கதையின் அதிர்ச்சியான திருப்பத்துக்காக கொடுக்கப்பட்டது.
ஏற்றுக்கொண்ட விஷயம் எதுவானாலும் அதனை உள்வாங்கி வெற்றிகரமாக வெளிப்படுத்தும் திறமை ஜெயலலிதாவிடம் சிறுவயது முதலே தாராளமாகவே இருந்தது..
அதனால்தான் கதாநாயகியாக நடிக்கும் முன்பே இங்லீஷ்,இந்தி படங்களிலும் சிறுமியாக இருந்தபோதே நடிக்க முடிந்தது.
இனி இதுதான் உலகம் என்று சினிமா வாழ்க்கையில் தாயார் சந்தியா தள்ளிவிட்டதால், ஜெயலலிதா துவண்டுபோய்விடவில்லை. இதுதான் ஒரே வழி என்று தீர்மானமாகிவிட்டால் அதன் இறுதிவரை போய் சாகசம் காட்டுவதில் ஜெயலலிதா கில்லாடி ஆயிரத்தில் ஒருவன் படம் தன் தலையெழுத்தை மாற்றப்போகிறது என்று புரியாமல்தான் அந்த கன்னித்தீவில் காலெடுத்து வைத்தார்.
காலத்தின் விந்தை. இப்போது சினிமா உலகில் கெமிஸ்ட்ரி என்கிறார்களே, அதுபோல 31 வயது மூத்தவரான எம்ஜிஆருடன் ஜெயலலிதா தொடர்ந்து ஜோடி சேரும் அளவுக்கு இருவருக்கும் இடையே சினிமா கெமிஸ்ட்ரி அற்புதமாய் அமைந்தது.
ஒரு கட்டத்தில், தமிழ்நாட்டின் நெம்பர் ஒன் வசூல் சக்ரவர்த்தியான எம்ஜிஆர் நடித்து தொடர்ச்சியாக வெளிவந்த 12 படங்களில் ஜெயலலிதாதான் கதாநாயகி. இநதிய சினிமா வரலாற்றில் இப்படியொரு ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சாதனை கிடையவே கிடையாது. குடியிருந்த கோவில், ஒளிவிளக்கு, நம்நாடு அடிமைப்பெண், எங்கள் தங்கம்,மாட்டுக்கார வேலன் என பல பிளாக் பஸ்டர்கள்.
28 படங்களில் ஜோடி சேர்ந்த ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆரின் கனவுப்படமான உலகம் சுற்றும் வாலிபனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. திரைமறைவு சதிகள் வலுப்பெற்றதில் எட்டுவருட திரை ஜோடி 1973-ல் பட்டிக்காட்டு பொன்னையாவோடு பிரிந்துபோனது.. அதன்பின் நிஜத்திலும் பிரிந்தார்.
எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்து கலக்கியதுபோலவே நடிகர் திலகம் சிவாஜியுடன் வெற்றிகரமான கதாநாயகியாக பல படங்களில் வலம் வந்தார் ஜெயலலிதா. ஆனால் சிவாஜியுடன் முதன் முதலில் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) படத்தில் அவர் சிவாஜிக்கு மகளாக வந்தார் என்பதுதான் ஆச்சயர்மான உண்மை. அதன்பிறகு சிறிது காலம் கழித்துதான் நடிகர் திலகத்துடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்தார். கலாட்டா கல்யாணம், தெய்வமகன், பட்டிக்காடா பட்டணமா, ராஜா, அவன்தான் மனிதன் என அந்த பட்டியல் அது ஒரு மாதிரியான சூப்பர் அதகள ரகம்.
பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி போன்றோர் சீனியராகிக்கொண்டிருந்த 60களின் மத்தியில் ஜெயலலிதாவின் வரவு துள்ளாட்டத்தின் துவக்கம் என்றே சொல்லலாம். கேஆர் விஜயா, காஞ்சனா, ராஜஸ்ரீ போன்ற சக காலத்து நடிகைகள் எட்ட முடியாத உயரத்தை, பப்ளி ஃபேஸ் என்பார்களே அப்படிப்பட்ட முகவாகு கொண்ட ஜெயலலிதா சர்வ சாதாரணமாக தொட்டார். சந்திரோதயம் மேஜர் சந்திரகாந்த் போன்ற படங்களில் அந்த முகத்தை இன்றும் தரிசிக்கலாம்.
இளைய நடிகர்களான ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் போன்றோருடன் சுழன்று சுழன்று ஆடுவதிலும் சரி, அழகுப்பதுமையாக ரசிகர்களை கவர்ந்ததிலும் சரி.. ஜெயலலிதாவின் இடத்தை மற்ற நடிகைகளால் பிடிக்கமுடியவில்லை.. மற்ற முன்னணி நடிகைகளிடம் இல்லாத ஒரு திறமை ஜெயலலிதாவிடம் கூடுதலாக இருந்தது. அது பின்னணி பாடலை பாடுகின்ற அளவிற்கு அழகான குரல் வளம் தான்..
முதன்முதலாய் அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதாவை பின்னணி பாட செய்தார் எம்ஜிஆர். இதன் பின் ஜெயலலிதா அதிகம் பாடவில்லை என்றாலும் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தன என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அன்பைத்தேடி படத்தில் சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கட்டிவைத்தேன், சூரியகாந்தி படத்தில் மேரி தில்ரூபா, வைரம் படத்தில் இரு மாங்கனி போல் இதழ் ஓரம்..போன்றவையெல்லாம் அந்த ரகம்தான்.. ஆடல் பாடல் நடிப்பு என சகல திறமைகளையும் ஒருங்கே பெற்றதால்தான் இரண்டு தலைமுறை கதாநாயகர்களுடன் அவரால் வெற்றிகரமான கதாநாயகியாக கொடிகட்டிப்பறக்கமுடிந்தது.
வந்தாளே மகராசி, சூரியகாந்தி திருமாங்கல்யம், கமலுடன் நடித்த உன்னைச்சுற்றும் உலகம் போன்ற படங்களெல்லாம் ஒற்றை நாயகியாய் ஒட்டுமொத்தமாக தலையில் சுமந்து பிரமிக்க வைத்தார் ஜெயலலிதா.
ரஜினியின் பில்லா பட நாயகி வாய்ப்பை மறுத்தது, தன்னைவிட மூன்று வயது இளையவரான நடிகர் சரத்பாபுவின் படத்தில் நாயகியாக நடித்தது, என ஜெயலலிதாவின் திரையுலபயணம் நதியை தேடிவந்த கடலோடு முடிந்தபோது பல வியப்புகள் மிஞ்சின.
நதியை தேடி வந்த கடல் படத்தில் இளையராஜா இசை அமைப்பில் தவிக்குது தயங்குது ஒரு மனசு பாடல் இன்றும் காதுகளில் தேனாகப் பாய்ந்தது கொண்டிருக்கின்றது. திரைப்பட வாழ்க்கையை தாண்டி தனிப்பட்ட வாழ்வில் ஏமாற்றமும் சறுக்கல்களுமே கையில் கிடைத்தன.
விரக்தியான மனநிலையில் வெளியுலக வாழ்வில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிப்போய்விட்ட நடிகை ஜெயலலிதாவுக்கு, இம்முறை அரசியல்வாதி என்ற அரிதாரத்தை பூசினார், நடிகனும் நாடாளமுடியும் என நாட்டுக்கே நிரூபித்து காட்டி முதலமைச்சராகியிருந்த எம்ஜிஆர். ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அழைத்து, அதிமுகவில் உறுப்பினராக்கினார். கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்புவேறு..
கடலூரில் மக்கள் அலைவெள்ளத்தில் கலக்கினார்.. திமுக நாளேடான முரசொலி, “கடலூர் கார்ப்பெட்” என்று விமர்ச்சித்தது.. எம்ஜிஆர்-ஜெயலலிதா நெருக்கம் மீண்டும் தூசியெடுக்கப்பட்டு திமுக மேடைகளில் சகட்டுமேனிக்கு விளாசப்பட்டது.. ஆனால் ஜெயலலிதாவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் எம்ஜிஆரின் கனவு திட்டமான சத்துணவுத் திட்டத்திற்கு உழைத்து அதனோடு சேர்ந்து தன்னையும் புகழ் பெறச் செய்து கொண்டார்.
அரசியல் சொல்லடிகளை தாங்கிக்கொண்டு பக்குவப்பட்டுப் போனவருக்கு 1984 மார்ச் 24ல் இன்ப அதிர்ச்சி.. ராஜ்யசபா எம்பியாக நியமனம்.. நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா உட்கார்ந்த அதே இருக்கை கிடைத்தது.. அருமையான இங்கிலீஷில் நேர்த்தியாக இருந்தது ஜெயலலிதாவின் கன்னிப்பேச்சு.. சபையே வியப்பாக பார்த்தது. பிரதமர் இந்திரா காந்தியையும் ஈர்த்துவிட்டது ஜெயலலிதாவின் பேச்சு
செக்கச்சிவந்த தங்கச்சிலை போல் பவனி வந்த ஜெயலலிதாவை ‘’அறிவுடன் கூடிய பேரழகு எம்பி’’ என்று வர்ணித்தார் பெரும் புகழ் பெற்ற எழுத்தாளரான குஷ்வந்த் சிங்..
எம்ஜிஆரின் கட்டளைப்படி பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தார் ஜெயலலிதா.. இந்த சந்திப்பின் நோக்கம், காங்கிரசுடன் அதிமுகவுக்கு கூட்டணிக்கான பாலத்தை அமைப்பது. கடைசியில் அது அப்படியே நிறைவேறவும் செய்தது.
டெல்லி அரசியல் கால்பதித்து அந்த தந்திர பூமியின் சூட்சுமங்கள் அத்துப்படியாகும்போது, ஜெயலலிதாவுக்கு வயது வெறும் 36 தான். 1987ல் எம்ஜிஆர் மறைந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள், வேறொரு பெண்ணுக்கு நேர்ந்திருந்தால், போதுமடா சாமி என ஏதோ ஒரு வெளிநாட்டுக்குப் போய் செட்டில் ஆகியிருப்பார். ஆனால் ஜெயலலிதாவோ அத்தனை சொல்லடிகளையும் எதிர்தரப்பு அரசியல்வாதிகளிடமிருந்து வாங்கி பதிலுக்கு செமையாக அடிகளை திருப்பித்தந்தார். அவரின் துணிச்சல், கம்பீரம் அதற்கு பெரும் துணையாக இருந்தன..
எம்ஜிஆருக்கு பிறகு அதிமுக, ஜானகி அணி, ஜெ.அணி என இரண்டாக பிரிந்துபோனது. இதனால் ஆட்சி மகுடத்தை தொடர்ந்து நான்காவது முறையாக வெல்லும் வாய்ப்பை 1989 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இழந்தது.. ஆனால் சில மாதங்களிலேயே ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவதில் வெற்றிகண்டுவிட்டார் ஜெயலலிதா. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த திமுகவிற்கு அடுத்த நடந்த மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச்செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். ஜெயலலிதாவை பார்த்து திமுக தலைமை உண்மையிலேயே மிரண்டுபோன முதல் திகில் தருணம் அது.
அத்தோடு ஆளும் திமுகவை ஜெயலலிதா விடவில்லை. . அவர் தலைமையில் 1989 நவம்பரில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட்டது..
39 தொகுதிகளில் 38 ஐ கைப்பற்றி எதிர்கட்சி திமுகவுக்கு தன் ஆளுமை மூலம் பெரும் அதிர்ச்சி தந்தார். திமுக கூட்டணியிலிருந்த இ.கம்யூனிஸ்ட் மட்டுமே நாகப்பட்டிணத்தில் வென்றது..
1977ல் நாடு முழுவதும் மக்களவை தேர்தலில்தோற்ற இந்திராகாந்தி தமிழ்நாட்டில் மட்டும் எப்படி எம்ஜிஆர் கூட்டணியில் இருந்ததால் ஜெயித்தாரோ,
அதேபோலத்தான், 1989ல் நாடு முழுவதும் பின்னடைவை சந்தித்த ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதாவுடன் வைத்த கூட்டணியால் வெற்றிகண்டது.
1977 ல் ஆசான் எம்ஜிஆர் செய்த அதே சாதனையை 1989 ல் சிஷ்யை ஜெயலலிதா நிகழ்த்தினார். வெறும் ஒன்றரை ஆண்டுகளில் அதிமுகவை சீரமைத்து, திமுகவை சுத்தமாக ஜெயலலிதா வாஷ் அவுட் செய்தது அரசியலில் புதிய சாதனை. எம்ஜிஆர் தலைமையில் அதிமுக இருந்தபோதுகூட அப்படியொரு மோசமான தோல்வியை திமுக சந்தித்ததில்லை. © Ezhumalai Venkatesan
திமுகவை அலறவிடும்போக்கு, 1991 சட்டமன்ற தேர்தலில் இன்னும் மூர்க்கமாக தென்பட்டது ஜெயலலிதாவிடம். 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபைக்கு, அதிமுக கூட்டணிக்கு கிடைத்த இடங்கள் 225 . ராஜீவ் காந்தி படுகொலையால் கிடைத்த அனுதாப வெற்றி என்று சொல்லும் ஜெயலலிதா எதிர்ப்பாளர்கள் 1989 மக்களவை தேர்தல் முடிவை வசதியாக மறந்துவிடுவார்கள் தனிக்கதை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையுடன், அரியணை ஏறிய ஜெயலலிதாவுக்கு அப்போது வயது வெறும் 43தான்.. இவ்வளவு இள வயதில் முதலமைச்சர் பதவி என்பதும் தமிழகத்தில் மேலும் ஒரு புதிய சாதனை.. கலைஞர் முதலமைச்சராக பதவியேற்கும்போது வயது அவருக்கு 45. எம்ஜிஆர் 60 வயதில்தான் பதவியேற்றார்.
ஆனால் முதலமைச்சரான பிறகு எதிர்கட்சி திமுகவைவிட, உடன் இருந்தவர்களால்தான் ஜெயலலிதாவுக்கு பிரச்சினையே அதிகமாக வெடித்தது. உடன்பிறவா தோழி சசிகலா வின் குடும்பத்தில் தனக்கு எதிராக அரசியல் சதி நடப்பதை மோப்பம் பிடித்தார். கடைசியில் ஆட்சிக்கு வந்த மறுஆண்டே அதாவது 1992, ஆகஸ்ட் 5-ந்தேதி இரவு எட்டு மணிக்கு ராஜினாமா கடிதத்தை எடுத்துக்கொண்டு ஓடினார் ஆளுநர் மாளிகைக்கு.
விஷயத்தை கேட்டுபதறிப்போன ஆளுநர் பீஷ்மநாராயண் சிங்கிடம், சசிகலாவின் கணவர் நடராஜன் 35எம்எல்ஏக்களை வைத்து வில்லங்கமான வேலையை செய்ய முயற்சிப்பதாக சொன்னார் ஜெயலலிதா. ஆனால் ஆளுநர், “ஒரு நாள் அமைதியாக காத்திருந்து பிறகு வாருங்கள்..அப்போது நிலைமையை பார்த்துக்கொள்ளலாம், இவ்வளவு அவசரம் வேண்டாம்” என்று சாந்தப்படுத்தி அனுப்பினார்.
மறுநாள் ஜெயலலிதாவின் முடிவு மாறிப்போய்விட்டது. அதன் பின்னர் எதுவுமே அவருக்கு சரியாக அமையவில்லை.. சசிகலா குடும்பத்தினரின் அத்துமீறல்கள் தமிழகம் முழுவதும் வியாபித்து ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது அவற்றை ஜெயலலிதா கண்டுகொள்ளவேயில்லை.
எல்லாவற்றிற்கும் உச்சம், வளர்ப்பு மகன் எனச்சொல்லி விஎன் சுதாகரனுக்கு செய்துவைத்த ஆடம்பர திருமணம்.. ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு என பல டெரர் சம்பவங்களுக்கு பஞ்சமே இல்லாமல் போனது.
திமுகவை சுத்தமாக வாஷ் அவுட் செய்து தேர்தலில் எம்ஜிஆரையும் மிஞ்சிய அதே ஜெயலலிதாதான், 1996 சட்டமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை அதிமுகவுக்கு வாங்கிக்கொடுத்தார். அவ்வளவு ஏன், சுகவனம் என்ற சாமான்யனிடம் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோற்றுப்போனார். கலைஞரே கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார் ஜெயலலிதாவை பர்கூர் மக்கள் தோற்கடிப்பார்கள் என்று.
ஜெயலலிதாவின் 1991-1996 ஆட்சிக்காலம்போல அப்படியொரு திகிலான ஆட்சியை அதற்கு முன் தமிழகம் கண்டதில்லை என்பதே உண்மை. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அவரை போலீஸ் வேனில் திமுக அரசு ஏற்றும் நிலையும் வந்தது. எல்லோருமே ஜெயலலிதாவின் கதை அத்தோடு முடிந்தது என்று சொன்னார்கள்.. ஆனால், எதற்கும் ஜெயலலிதா கலங்கவேயில்லை. இன்னும் பல மடங்கு மனபலம் பெற்று அரசியலில் அடுத்த பாகத்தை ஆரம்பித்தார்.
போலீஸ் வேனில் விசாரணை கைதியாக ஏற்றப்பட்ட ஒரு முன்னாள் முதலமைச்சர், அடுத்த சில ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியையே தீர்மானிக்கும் அளவிற்கு அரசியலை தன்வசப்படுத்தி அனைவரையும் அதிர வைத்தார். ஜெயலலிதா ஆதரவுக்கரம் நீட்டியதில் முதன் முறையாக பிரதமர் ஆனார் வாஜ்பாய்.. ஆனால் அதே வாஜ்பாயின் ஆட்சியை அவசர அவசரமாக கொட்டி கவிழ்த்து நாடு முழுவதும் தன்னைப் பற்றி பேசும்படி பார்த்துக்கொண்டார் ஜெயலலிதா..
எந்தத் திமுக தன்னை சிறைக்கு அனுப்பியதோ அதே திமுகவை தோற்கடித்து ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி மறுபடியும் ஆட்சியை பிடித்தார் 2001-ல். நான்கு வாரங்களுக்கு மேல் தன்னை மத்திய சிறையில் கைதியாக வைத்திருந்த கலைஞர் மீதான கோபம் ஜெயலலிதாவை மறக்கச் செய்யவில்லை.. அதிரடி உத்தரவுகள் பறக்க, ஒரு நள்ளிரவில் பெரும் பதற்றமான சூழலில் வீட்டில் இருந்தபடி கலைஞர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.. மத்திய அமைச்சர்களாக இருந்த திமுக தலைவர்களுக்கோ மரண பயத்தை காட்டியது அதிமுக அரசு..
திமுக கூட்டணியில் இருந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களே செய்வதறியாது கையைப் பிசைந்து நேரமது. கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது நமக்கு சன் டிவி செய்திப் பிரிவில் இரவு பணி. தொடர்ந்து 72 மணி நேரம் எடிட்டோரியலே கதியாக கிடந்தது வாழ்க்கையில் மறக்கவே முடியாத பதற்றமான அனுபவம். அதையெல்லாம் விவரிக்க போனால் அது நீண்டு கொண்டே போகும். அதனால் விஷயத்திற்கு வருவோம்
காலம் விசித்திரமானது அல்லவா.. ஊழல் வழக்கில் நீதிமன்ற தண்டனைக்கு ஆளாகி முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டு இந்திய அரசியல் வரலாற்றில் களங்கம் நிறைந்த பக்கத்துக்கு சொந்தக்காரர் ஆனார் ஜெயலலிதா.. மீண்டும் இதே மாதிரியான ஒரு களங்கம், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் நூறு கோடி ரூபாய் அபராதத்துடன் நான்கு ஆண்டு சிறை தண்டனை தந்தபோது முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டு நிகழ்ந்தது..
இந்தியாவில் இப்படி ஒரு நிலைக்கு ஆளான ஒரே முதலமைச்சர் ஜெயலலிதாதான். கும்பகோணம் மகாமகம் நெரிசல் பலி, தர்மபுரி மாணவிகள் பேருந்து எரிப்பு, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு என அரசியல் எதிரிகள் இன்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜெயலலிதாவை விமர்சிக்க கையில் எடுக்கும் ஆயுதங்கள்
ஆனால் எவ்வளவு இறக்கங்கள் ஏற்பட்டாலும் மறுபடியும் மறுபடியும் ஏற்றங்கள் காணாமல் போக மாட்டேன் என்று சூளுரைத்து அரசியலை நடத்தும் அசாத்தியத் துணிவு அவருக்கு இருந்தது.
அமைச்சர்களிலேயே தீவிர விசுவாசி என்று தான் நம்பிய பன்னீர்செல்வத்தை இருமுறையும் நெருக்கடிகளின் போது முதலமைச்சர் ஆக்கிவிட்டு கட்சியிலும் ஆட்சியிலும் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந்து அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 2014 ஆம் ஆண்டு மோடியா இந்த லேடியா என்று கேட்டு மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் அதிமுகவை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக நிலைநிறுத்தியதிலும் சரி..
2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டைஇலை என்கிற ஒரே சின்னத்தை நிற்கச் செய்ததிலும் சரி, அரசியல் ஆசான் எம்ஜிஆரையே மிஞ்சிய தருணங்கள்.. ஆட்சியில் இருந்தாலும் சரி.. இல்லையென்றாலும் சரி.. நாட்டிற்கு எப்பேர்பட்ட தலைவர்களாக இருந்தாலும் தன்னைத் தேடி வந்துதான் பார்த்தாக வேண்டும் என்ற ஒரு ஒரு ஆளுமையை உருவாக்கி வைத்திருந்தவர் அவர்.
மதிக்கத் தெரியாதவர், அகம்பாவம் பிடித்தவர் போன்ற விமர்சனங்களை எல்லாம் அவர் பொருட்படுத்தியதே கிடையாது..
ஆனால் அதே ஜெயலலிதா தனக்கு 60வது வயது பிறந்தபோது, தான் மிகவும் மதித்த நடிகர் எம் என் நம்பியார், சோ போன்ற மூத்த நபர்களை தேடி சென்று ஆசிர்வாதம் பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தனது அப்பா அம்மா அண்ணன் ஆகிய யாருமே 60 வயது எட்டாமலேயே இறந்து போனநிலையில் அந்த பாக்கியம் தனக்கு மட்டுமே கிடைத்தது என்பதை உருக்கமாக சொன்னார் ஜெயலலிதா.. பழுத்த ஆன்மீகவாதியான ஜெயலலிதா திராவிட இயக்கங்களின் முக்கிய அம்சங்களான சமூக நீதி மற்றும் அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை என்றுமே புறக்கணித்தது இல்லை.
69 சதவீத இட ஒதுக்கீடுஎன்பதை நிலைநாட்டி சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தையும் பெற்றவர் ஜெயலலிதா.
காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் நீர் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை நடத்தியதும் அவர் வரலாற்றில் மெச்சத் தகுந்த பக்கங்கள்.
முடியவே முடியாது என்று அரசியல் எதிரிகளால் எகத்தாளம் செய்யப்பட்ட பல விஷயங்களை, சர்வசாதாரணமாக செய்த திறமை ஜெயலலிதாவிடம் இருந்தது.
ஏழு மாதங்களில் உருவான சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம், சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இருந்து சென்னைக்கு வீராணம் குடிநீர் கொண்டு வந்த விதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. தொட்டில் குழந்தை, மழைநீர் சேகரிப்பு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் , இலவச சைக்கிள், அம்மா உணவகங்கள் போன்ற வரவேற்புக்குரிய திட்டங்களை கொண்டு வரவும் அவர் தவறவில்லை.
வெற்றியோ தோல்வியோ அது தன்னால் மட்டுமே நடக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர் ஜெயலலிதா.
அசாத்திய துணிச்சல், ஆணவம்.. இரண்டுக்குமே உதாரணமாகத் திகழ்ந்த வித்தியாசமான பெண்மணி
நாட்டின் பிரதமர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஒரு காலத்தில் பேசப்பட்டு வந்த ஜெயலலிதா, ஒருநாள் திடீரென உடல்நலக்குறைவு என ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு 75 நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து சவப்பெட்டியில் மட்டுமே வருவார் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை..
ஒரு முதலமைச்சருக்கு மரணம் எப்படி நேர்ந்தது என்பது பற்றி விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்கும் அளவுக்கு மர்மங்கள்.. இன்றுவரை யாரும் விடை தர மறுக்கிறார்கள் உடனிருந்த அத்தனை பேர் உள்பட.
“என்ன இருந்தாலும் அந்த அம்மாவுக்கு இருந்த துணிச்சல் வராதுப்பா.. “
— அரசியல் எதிரிகள்கூட ஆதங்கத்தோடு இன்றும் சொல்லும் வார்த்தைகள்.
அதுதான் ஜெ, என்ற ஓரெழுத்து..
எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று © Kanchi Ezhumalai Venkatesan