ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தின் உடலில் பிரதே பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல் அவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை, கடந்த நான்கு நாட்களாக மீட்கும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து மீட்பு பணிகளில் பின்னடைவு, கருவிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக 80 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது.

சரியாக 2.15 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சுர்ஜித் இறந்துவிட்டதாகவும், அதிக அளவில் அழுகிய நிலையில் அவனின் உடல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், உடலை தேசிய மீட்பு படையினரும், தனியார் மீட்பு படையினரும் இணைந்து மேலே எடுத்து வருவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சடலமாக அழுகிய நிலையில் மீடக்கப்பட்ட சுர்ஜித்தின் உடல், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பணிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

சுமார் 30 நிமிடங்கள் உடற்கூறாய்வு நடந்த நிலையில், பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக ஆம்புலென்சில் சிறுவனின் உடல் ஏற்றப்பட்டது. அப்போது மருத்துவமனையின் வாயிலில் அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து சுர்ஜித்தின் உடல் நேராக ஆவாரம்பட்டி புதூர் பகுதியில் உள்ள பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சுஜித்தின் உடலை பார்த்து அவரது தாயார் கண்கலங்கிய காட்சிகள், அங்கு கூடியிருப்போரிடம் மன வேதனையை ஏற்படுத்தியது. சுஜித்தின் உடலுக்கு கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கிராம மக்களின் அஞ்சலிக்காக சுர்ஜித்தின் உடல் சில நிமிடங்கள் வைக்கப்பட்டு, பின்னர் கிருத்துவ மத முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது.