மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது, ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் தாக்குதல் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்து உள்ளார். மேலும், பாஜக சிவசேனா கட்சியை உடைக்க நினைத்தால், அதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று காலை திடீர் திருப்பமாக பாஜக ஆட்சி அமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் அஜித் பவார் தலைமையிலான  சில எம்எல்எக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிகழ்வு மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜகவின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே,   “கட்சிகளை உடைத்து ஆட்சியில் நீடிக்க பாஜக முயற்சி செய்கிறது மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது நடந்த சர்ஜிக்கில் ஸ்டிரைக் இது. ஜனநயாகத்தின் மீதான தாக்குதலுக்கு மகாராஷ்டிர மக்கள் நிச்சயம் பழிதீர்ப்பார்கள். மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

மக்கள் முன்னிலையிலேயே சிவசேனை அனைத்து முயற்சிகளையும் எடுத்தது ஆனால், பாஜக எல்லா விதிகளையும் மீறி ஆட்சி அமைத்துள்ளது. ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விட்டது பாஜக. ஏற்கனவே அரியானா, பீகாரிலும் இதேபோலதான் பாஜக ஆட்சி செய்தது என்று குற்றம் சாட்டியவர், தேர்தலே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி வருவதாகவும்,  எல்லாவற்றையும் இரவோடு இரவாகவே செய்கிறது என்று குறினார்.

பாஜகவின் இந்த செயலுக்காக, மக்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. சட்டப்படி எல்லாமே நடக்கட்டும். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கூறிய உத்தவ் தாக்கரே,  பாஜக சிவசேனாவை உடைத்தால் அதை சிவசேனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதைப் பார்த்து தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.