புதுடெல்லி:

மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே குறித்து பாஜக தலைவர் சத்வி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்துக்கு, ஓய்வு பெற்ற ராணுவ கமாண்டர் டிஎஸ். ஹுடா கண்டனம் தெரிவித்துள்ளார்.

போபால் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் சாத்வி பிரக்யா தாக்கூர், மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார்.

அதில், என்னை துன்புறுத்திய போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கேயை நான் சபித்தேன். 2 மாதங்கள் கழித்து அவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ் தரப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டராக இருந்து ஓய்வு பெற்ற ஹுடாவின் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அந்த செய்திக் குறிப்பில், சாத்வியின் கருத்து கண்டிக்கத்தக்கது. ராணுவத்தை சேர்ந்தவரோ,போலீஸ் துறையை சேர்ந்தவரோ உயிர்த் தியாகம் செய்தவரை விமர்சிப்பது சரியல்ல.

அவர்களுக்கு நாம் முழு மரியாதை செலுத்த வேண்டும். இத்தகைய பேச்சு சரியானது அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு யூரி தீவிரவாத தாக்குதலின்போது, பாகிஸ்தானில் துல்லிய தாக்குதல் நடத்தியவர் ஹுடா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தான் ஹேமந்த் கார்கே பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்பதாக சத்வி பிரக்யா தாக்கூர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.