உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் நாளை (நவம்பர் 10) ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் திங்களன்று பதவியேற்க உள்ளார்.
புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா தேர்வு செய்யப்பட்டதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது வழக்கமான நடைப்பயிற்சி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள லோடி கார்டன் பகுதியில் அதிகாலை வேளையில் சஞ்சீவ் கண்ணா தனிமையில் சில கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட பின் நடைப்பயிற்சியில் போது அவருடன் பாதுகாவலர்களும் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதை அடுத்து தனது தனிமையை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் நடைப்பயிற்சியை விட்டுக்கொடுத்துள்ளார் சஞ்சீவ் கண்ணா.
டெல்லியில் உள்ள மாடர்ன் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சீவ் கண்ணா டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
சிறுவயதுமுதல் டெல்லியிலேயே படித்து வளர்ந்தவர் என்பதால் டெல்லியில் இவருடன் பள்ளி கல்லூரிகளில் படித்த நண்பர்களும் ஏராளமாக உள்ளனர்.
அவ்வப்போது காரை எடுத்துக்கொண்டு தனது நண்பர்கள் வீடுகளுக்கு செல்லுவதை வழக்கமாக கொண்ட இவருக்கு டெல்லியின் அனைத்து இடங்களும் அத்துப்படி என்று கூறப்படுகிறது.
எந்தவித பந்தாவும் இல்லாத தலைமை நீதிபதி என்று கூறப்பட்ட தலைமை நீதிபதிகள் வரிசையில் தற்போது புதிதாக சேர்ந்துள்ள சஞ்சீவ் கண்ணா தனது புதிய பதவி காரணமாக அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காரணமாக தற்போது நடைப்பயிற்சிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 11ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள இவர் 6 மாதங்கள் கழித்து வரும் 2025 மே மாதம் 13ம் தேதி ஓய்வு பெறுவார்.