புதுடெல்லி: அயோத்தியின் ராம் ஜென்மபூமி – பாப்ரி மஸ்ஜித் தொடர்பான நிலப் பிரச்சினையில், மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடுவதற்கான குழு அமைக்கப்படுமா? என்பது குறித்த தீர்ப்பை நாளை அறிவிக்கவுள்ளது உச்சநீதிமன்றம்.

ராம் ஜென்மபூமி – பாப்ரி மஸ்ஜித் நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கில், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது அலகாபாத் நீதிமன்றம். ஆனால், அதை எதிர்த்து பல மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

எனவே, இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு ஒரு குழு அமைப்பது தொடர்பான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்து இயக்கங்கள் சார்பில், நிர்மோஹி அகாரா அமைப்பை தவிர, பிற அனைத்து அமைப்புகளும் இந்த மத்தியஸ்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, முஸ்லீம் அமைப்புகளின் சார்பில் எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆதரவுதான் கிடைத்தன.

இந்நிலையில், மத்தியஸ்த முயற்சியை ஏற்படுத்தலாமா? இல்லையா? என்பது குறித்த தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளதால், நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி