டில்லி:
வாக்கு எண்ணிக்கையின்போது, எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக் களுடன், விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்றதும் வரும் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
வாக்குப்பதிவின்போது, பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு செய்ததால் பிரச்சினைகள் ஏற்பட்டன. மேலும் வாக்குகள் மாறி விழுவதாகவும் புகார் கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, உச்சநீதி மன்றத்தை நாடின. அப்போது அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடனும் விவிபாட் இயந்திரம் பொருத்தும்படியும், இதன் எண்ணிக்கையும், ஈவிஎம் இயந்திர வாக்குப்பதிவு எண்ணிக்கையும் ஒரே அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. ஆனால், அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்த நிலையில் உச்சநீதி மன்றமும் நிராகரித்தது.
இதையடுத்து, விவிபாட் ஒப்புகைசீட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், கேசி வேணுகோபால், டெரிக் ஓ பிரைன், சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், சதிஷ் சந்திரா மிஸ்ரா, மு க ஸ்டாலின், டி. கே ரங்கராஜன், பருக் அப்துல்லா, எஸ்எஸ் ரெட்டி, டேனிஷ் அலி, அஜித் சிங் ஆகியோர் சார்பில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுமீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.