டெல்லி: மத்தியஅரசு அறிவித்துள்ள ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பான மனுக்களை உச்சநீதி மன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வகையில், மத்தியஅரசு அக்னிபாத் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதனப்டி 17 வயது முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் வன்முறையும் நடைபெற்றது. இதையடுத்து, வயது தளர்வு அறிவிக்கப்பட்டதுடன், அறிவிப்பை வாபஸ் பெற முடியாது என்று கூறிய மத்தியஅரசு, தொடர்ந்து அக்னிபாத் திட்டத்திற்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. வழக்கறிஞர் ஹர்ஸ் அஜய் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன.இதில் அக்னி வீரர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அதனால் அக்னிபாதை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’என கூறியுள்ளார். வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அக்னிபாதை திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது’’ என கூறியுள்ளார்.
இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மத்திய அரசு சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்ககை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.