டெல்லி :
தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊதியத்தை எந்தவித பிடிப்பும் இன்றி உரிய தேதியில் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் 29 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
2020 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி செல்லாது என்றும், அரசியலமைப்பு சட்டம் 14 மற்றும் 19 வது பிரிவுகளை மீறியதாக கூறி கடந்த மாத இறுதியில் நாக்ரீகா எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஃபிகஸ் பாக்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட மூன்று தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடுத்திருந்தன.
மேலும், இந்த மனுவில், உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவால், கோடிக்கணக்கில் இழப்பை சந்திக்கவேண்டி இருக்கும் என்றும் கூறியிருந்தது, இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் என் வி ரமணா, சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கின் போது தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க உத்தரவிட்ட உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை நிறுத்திவைப்பதாக கூறினர்.
வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்டதை தொடர்ந்து, அடுத்த வாரம் வரை எந்தவொரு தனியார் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.