டில்லி
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பட்டாசுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு அளித்துள்ளது.
அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி, மற்றும் சோயா ராவ் என்னும் சிறுவர்கள் தங்களின் தந்தையர் மூலம் இந்திய அரசு மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் மேல் பொதுநல வழக்கு ஒன்றை 2015ஆம் வருடம் தொடர்ந்திருந்தனர். அதில் காற்று மசுபடுவதை தடுத்தல் உட்பட பல உரிமைகள் பட்டாசுகளால் பாதிக்கப்படுவதாகவும், அதை முறைப்படுத்த வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு மதன் லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய பென்ச் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. அர்ஜுன், ஆரவ், சோயா ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்களாக கோபால் சங்கரநாராயணன், அமித் பண்டாரி மற்றும் சவுரவ் பேசின் அகியோர் ஆஜராகி உள்ளனர்.
இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் அளித்த உத்தரவில், “பட்டாசுகளில், காற்றை மாசு படுத்தும் எந்தப் பொருளும் கலந்திருக்கக்கூடாது. உதாரணமாக ஆண்டிமொனி லித்தியம், மெர்க்குரி, ஆர்சனிக் மற்றும் ஈயம் அனைத்து பட்டாசுகளிலும் கலந்துள்ளது. இது இனி கலக்கக்கூடாது. இதை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. இந்தப் பொருட்கள் கலக்கவில்லை என துறை உறுதி அளிக்க வேண்டும். இது நாட்டிலேயே அதிகம் பட்டாசு உற்பத்தி ஆகும் சிவகாசியில் அவசியம் நடைபெற வேண்டும். பட்டாசுகளுக்கு தர நிர்ணயம் எதுவும் இல்லை. அதை முதலில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படுத்த வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.
இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தர நிர்ணயம் உடனடியாக செய்ய இயலாது என்றும், செப்டம்பர் 23 வரை கால அவகாசம் தேவை எனவும் கேட்டுக்கொண்டார். அது தவிர ஸ்ட்ரோண்டியம் மற்றும் அது சம்பந்தமான பொருட்கள் பற்றி சரியான விளக்கம் நீதிமன்றத்திடம் இல்லாததால் இந்த வழக்கை ஆகஸ்ட் 23 அன்று ஒத்து வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 23 அன்று, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் அவசியம் வர வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மூவரும் இணைந்து தரக் கட்டுப்பாடு நிர்ணயத்துகான விதிமுறைகளை ஏற்படுத்தும் முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும் எனவும் உத்தரவில் கூறி உள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட இரு உத்தரவுகளில் பட்டாசுகள் அளவுக்கு மீறி காற்றை நச்சுப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.