புதுடெல்லி:
வாக்குப் பதிவு இயந்திரத்தின் ‘ஸோர்ஸ் கோட்’ பாதுகாப்பு குறித்து 4 வார காலத்துக்குள் பதில் தருமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரத்தை சிதைக்கவோ அல்லது வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூளையாக கருதப்படும் ‘ஸோர்ஸ் கோடை’ மாற்றியமைக்கவோ முடியும் என சிஎன்என்-நியூஸ்18 இணைந்து ஆதாரத்தை வெளியிட்டன.
இதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. “வாக்குப் பதிவு இயந்திரத்தின் சாஃப்ட்வேரை தணிக்கை செய்வது கிடையாது. அதே ‘ஸோர்ஸ் கோட்’ தான் இருக்கிறது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்களின் ‘சாஃப்ட்வேர்’ தணிக்கை செய்யப்பட்டதுண்டா? என்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கேட்க வேண்டும்.
அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், ‘ஸோர்ஸ் கோட்’ பாதுகாப்பாக இருக்கிறது என்றும், சிதைக்க முடியாது என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் உறுதியை பெற வேண்டும்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில், ‘ஸோர்ஸ் கோடின்’ பாதுகாப்பு குறித்து 4 வார காலத்துக்குள் பதில் தருமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.