டெல்லி: சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நேபாளம் அத்தகைய தடையை முயற்சித்தபோது என்ன நடந்தது தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பியது.

நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இணையதளங்களில் பயன்படுத்துவதில் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது உள்ளதோ அந்த அளவுக்கு கெடுதலாக தகவல்களும் உள்ளன. இதனால், சிறுவர்கள் இணையதளத்தை பயன்படுத்தும்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சமீப காலமாக வன்முறைகள், போதை பழக்கம், பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு சமூக வலைதளங்களே காரணம் என குற்றம் சாட்டப்படும் நிலையில், நமது நாட்டிலும், 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நேபாளத்தில் சமூக வலைத்தளப் பயன்பாட்டை நிறுத்தியதால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதை பார்த்தீர்களா? என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் 14 வயது முதல் 18 வயதுடைய சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.