டெல்லி: வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய நடைமுறையை தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.  அதன்படி, திங்கள், செவ்வாய், சனிக்கிழமையில் பதிவாகும் வழக்கு அடுத்த திங்களன்று பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9ந்தேதி பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று (10ந்தேதி) தனது  பணியைத் தொடங்கினார். அப்போது வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை (தானியங்கி) பின்பற்றுமாறு பதிவாளருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவதில் புதிய நடைமுறையை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, வழக்குகள் தானாகவே விசாரணைக்கு பட்டியலிடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி,    திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அடுத்த திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும். அதுபோல வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும் மனுக்கள் அடுத்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.  இந்த முறையால் மனுக்களை பட்டியலிடுவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும். அவசர வழக்கு என்றால் தனியாக முறையிடலாம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள  நடைமுறையின்படி, பொதுமக்கள் அளிக்கும், மனுக்களை பதிவாளர் பரிசீலிப்பார். மனுக்களில் பிழை இல்லாத நிலையில் தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். அவர் மனுக்களை பரிசீலித்து குறிப்பிட்ட அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிடுவார்.  இந்த நடைமுறையில் கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல்செய்ய பதிவாளர் அலுவலகத்துக்கு அப்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித் உத்தரவிட்டார். இதன்படி கடந்த 5-ம் தேதி பதிவாளர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்த  புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.