புதுடெல்லி: ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் பதிவிட்ட டிவீட்டுகளில் ஒன்று, நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம் தானே முன்வந்து அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், இதேப் புகார் தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவுசெய்வதற்கான அனுமதியை, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜ்தீப் மீது குற்றம் சுமத்தியவர், தானே நேரடியாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்தே, உச்சநீதிமன்றத்தில் அந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தொடர்பான ஒரு தீர்ப்பில், நீதிமன்றம் அவருக்கு ரூ.1 அபராதம் விதித்தது. இதனையடுத்து அதுகுறித்து டிவீட் செய்த ராஜ்தீப், “நீதிமன்றம் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு சிக்கலிலிருந்து வெளியேற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துதான் நீதிமன்ற அவமதிப்பு என்று குறிப்பிடப்பட்டு, தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.