டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, பாஜக ஆதரவு வழக்கறிஞரான, விக்டோரியா கெளரி உள்பட 11 வழக்குரைஞா்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு திங்கள்கிழமை வெளியானது. அதனைத் தொடா்ந்து குடியரசு தலைவர் உத்தரவும் வெளியானது.

மத்திய அரசின் நியமன உத்தரவு வெளிவந்துள்ளதை சுட்டிக்காட்டி, விக்டோரியா கெளரி நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் இன்று காலை  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், அது   இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து,  உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது.

இதற்கிடையில் கவுரி உள்பட சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கவுரி உள்பட 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.  விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விக்டோரியா கவுரி, நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வருடத்துக்கு அவரது செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், நாங்களும்தான் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறோம்,  தானே மாணவனாக இருந்த போது அரசியல் கட்சித் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்று நீதிபதி கவாய் கூறினார்.

கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நீதிபதியாக இருந்து வருகிறோம், மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா? என கேள்வி எழுப்பினர்.

வழக்கின் உத்தரவு மற்றும் தீர்ப்பு வழங்கும்போது, அரசியல் பார்வையை கொண்டு வரவில்லை, அது விக்டோரியா கவுரிக்கும் பொருந்தும்தானே? என்ற கூறியவர்கள்,  அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதிகளாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது.

நீதிபதிகளை அவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளின் அடிப்படையில் பின்தொடர முடியாது. அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பின்னரே, நீதிபதியாக கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து, இந்த வழக்கை ஏற்க மறுப்பதாக கூறி தள்ளுபடி செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி மற்றும் 4 பேர் பதவி ஏற்றனர்…