டெல்லி:  சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு  இன்று உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை நவம்பர் 6ந்தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

அதே வேளையில், தமிழ்நாடு அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்குகள் தொடர்பாக பா.ஜ.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி,  சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைதரு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமின்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனு இன்று  உச்சநீதிமன்றத்தில் இன்று நண்பகல் 12.30க்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை நவம்பர் 6ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தமிழக அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடிக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம்  மீண்டும் விசாரணைக்கு  எடுத்துள்ள நிலையில், அதை எதிர்த்து,  அமைச்சர்கள் மற்றும்  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களிடம் கருத்து கேட்காமல் உத்தரவிடக்கூடாது என கூறி, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.