டில்லி:

நாடாளுமன்ற தேர்தலில், ஒரு தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்கள் பொருத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித் தோம் என்பதைத் தெரிவிக்கும் விவிபாட் இயந்திரங்களும் இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக, தெலுங்குதேசம்  உள்பட 21 கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கை விசாரித்த  உச்சநீதி மன்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு,  ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்புகை சீட்டு எந்திரங்கள் மூலம் வாக்குகளை சரிபார்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண்ட பத்திரத்தில்,  தற்போதைய நிலையில் ஒரு தொகுதிக்கு ஒரு விவிபாட் இயந்திரம்  மட்டுமே இவிஎம் இயந்திரத்துடன் பொருத்தப்படும் என தெரிவித்தி ருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, விவிபாட் இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு கணக்கிட்டு அறிவித்தால் தேர்தல் முடிவு அறிவிக்க ஒருவாரத்திற்கு மேலாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்போது வாதிகள் தரப்பில், குறைந்தது 50 சதவிகிதம் அளவுக்காக விவிபாட் இயந்திரங்கள் பொருத்த வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த நிலையில், வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.,  விவிபாட் இயந்திரம் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால், அது  துல்லியமாகவும், திருப்தியாகவும் இருக்கும் என்று கூறிய நீதிபதிகள், அது  மிக உயர்ந்த அளவிலான உறுதி என்று தெரிவித்தனர்.  அதையடுத்து, ஒரு தொகுதியில்  குறைந்தது 5 விவிபாட் இயந்திரங்களை பொருத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.