டில்லி,
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவசரமாக பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவ்ல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர். அப்போது தலைமை நீதிபதி மிஸ்ரா மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.
உச்சநீதி மன்றத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய் ஆகிய 4 நீதிபதிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கும் எதிர்ப்பு தெரிவிதனர்.
மேலும், சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே எடுப்பதாகவும், இப்படியே போனால் ஜனநாயகம் தலைக்காது என்ற நீதிபதிகள், வரலாற்றில் இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வேறு வழியே இல்லாததால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறோம் என்றார்.
இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் பதில் இல்லை என்ற அவர்கள், வேறு வழியில்லாததால் இன்று மக்கள் மத்தியில் பேச முடிவெடுத்தாக கூறினர்.
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டுக்கள் காரணமாக மத்திய அரசு அதிர்ந்து உள்ளது. ஜனநாயகத்தின் பிரதான தூணான உச்சநீதி மன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகளே, தலைமை நீதிபதிமீது குற்றச்சாட்டுக்களை இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில் கூறியிருப்பதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் முக்கிய அமைச்சர்கள் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டுக்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.