டெல்லி: நீட் பிஜி 2023 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நுழைவுத் தேர்வு அசல் அட்டவணை யின்படி நடத்தப்படும் என கூறியுள்ளது.

அதாவது மார்ச் 5. “முதல் சாளரத்தில், கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து மூவாயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இன்டர்ன்ஷிப் காலக்கெடு நீட்டிக்கப்பட்ட பிறகு ஆறாயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர்.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ முதுநிலை தேர்வு வருகிற மார்ச் 5-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுவில்,   ‘நீட்’ தேர்வுக்கு தயாராவதற்கு தங்களுக்கு போதுமான நேரம் இல்லை. தங்களுக்கான ஓராண்டு கால மருத்துவப் பயிற்சிக்கான ‘கட்-ஆப்’ தேதி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ‘நீட்’ தேர்வை சில வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள்  எஸ்.ஆர்.பட், தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது நீட் தேர்வை நடத்தும்,  தேசிய தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, ‘நீட்’ தேர்வை நடத்தும் மாற்று தேதிக்கு வேறு வாய்ப்பு இல்லை,  தேர்வுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், விவேக் தங்கா ஆகியோர், ‘நீட்’ தேர்வை தள்ளிவைத்து, அதற்கான கவுன்சிலிங்கை ஆகஸ்டு 11-ந் தேதிக்குப் பிறகு நடத்தினால் மருத்துவ மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என வாதிட்டனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  ‘நீட்’ தேர்வு எழுதுவதை உலகத்தில் எதுவும் தடுக்க முடியாது. சரியோ, தவறோ, இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.  இதுபோன்ற மனுக்களை ஊக்குவிக்க முடியாது’ என்று கூறி தள்ளுபடி  செய்து உத்தரவிட்டனர்.