டெல்லி: ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வந்திருந்தபோது, கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ந்தேதி (21 May 1991) விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 30ஆண்டுகளுக்கு மேல் சிறையில் 7பேர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் பேரறிவாளை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து மற்ற குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற மற்ற 6 பேரும் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்தவாக அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 6 பேர் விடுதலை தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் மற்றும் தகவல் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் எம்.பி, வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ஸ்ரீ ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் முற்றிலும் தவறானது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தெளிவாகக் குறைகூறுகிறது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் காண்கிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது. இருந்தாலும் இந்தப்பிரச்சினையில் இந்தியாவின் உணர்வுடன் நாங்களும் இணக்கம் கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.