டெல்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுiவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்த நிலையில், தற்போது மேலும் அடி விழுந்துள்ளது.
ஜூன் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது, ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றி, கலவரம் செய்து, பூட்டப்பட்ட அறைகளை உடைத்து ஆவணங்களை அள்ளிச்சென்றனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தை திமுக அரசு சீல் வைத்தது. ஆனால், உயர்நீதிமன்றம், சீலை அகற்றிவிட்டு, சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி தரப்பு பதில்அளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக நேற்று எடப்பாடி தரப்பில், பதில் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட ஒருவரிடம் அதிமுக சாவியை கொடுப்பது முறையாக இருக்காது ? அதிமுகவிற்கு தொடர்பில்லாத ஒருவரிடம் அலுவக சாவியை கொடுக்க கூடாது. ஓபிஎஸ்ஸின் முறையீட்டு மனு விசாரிக்க தகுதியற்றது. எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுத்துப்பூர்வமாக தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இரு தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். காரசாரமாக வாதங்கள் நடைபெற்று வந்தன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டை என்பது அண்டை வீட்டுக்காரர்களின் இடையேயான பிரச்னையல்ல என்று தெரிவித்ததுடன், தனிநபர்கள் போன்று இருவரும் அடித்துக் கொள்வதா என கேள்வி எழுப்பபினார். தொடர்ந்து நடைபெற்ற வாதங்களைத் அடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஓபிஎஸ்ஸின் முறையீட்டு மனு விசாரிக்க தகுதியற்றது என கூறி தள்ளுபடி செய்தது. அதிமுக சாவியை எடப்பாடியிடம் வழங்கிய உத்தரவு செல்லும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த பரபரப்பான சூழலில் கருத்து தெரிவித்துள்ள ஈபிஎஸ் ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ”ஓபிஎஸ் உச்ச நீதிமன்றம் சென்றாலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும். எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதிமுக என்றால் இபிஎஸ் தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள். அதிமுக கொடி மற்றும் 1.5 கோடி தொண்டர்கள் இனி இபிஎஸ்க்கு தான் சொந்தம். இனி யாரும் கூக்குரல் இட முடியாது” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.